Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த ஜோதிமணி எம்.பி..!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

MP Jothimani twitted about edappadi palanisamy


தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை செய்துவருகின்றன. திமுக, அதிமுக என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார்.

 

நேற்று கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டிவருகிறார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும்” என்று தெரிவித்திருந்தார். 

 

 

 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி, தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி. இணக்கமா இருந்து  சாதிச்சதுன்னு என்ன? தமிழகத்துக்கு உரிய ஜி.எஸ்.டி. கூட கிடைக்கல. காவேரி ஆணையம், கீழடி, தமிழ் போச்சு, நீட், மின்கோபுரம வந்துச்சு. ஊழல் வழக்கிலிருந்து உங்களை காப்பாத்திகிட்டதுதான் மிச்சம்” என்று தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.