மோடி பிரதமராக இருக்கும் தகுதியை சமீபகாலமாக இழந்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், மீண்டும் தென்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்போடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் மோடி இரண்டு முறை கர்நாடகா வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு சென்றுள்ளார். அவரது பிரச்சாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து சரமாரியாக விமர்சித்து வருகிறார்.
சித்தராமையா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதமர் மோடி, அவர் அரசுத் திட்டங்களுக்கு 10% கமிஷன் எதிர்பார்க்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும், மக்களின் எண்ணம் எனக்கு நன்றாகவே புரிகிறது. மக்களுக்கு கமிஷன் அரசை விட மிஷன் அரசுதான் தேவை என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலடிக்கும் விதமாக பேசியுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘பிரதமர் மோடி பிரதமரைப் போல பேசுவதில்லை. கர்நாடகா மற்றும் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பற்றி அவர் வாய் திறப்பதில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய பொறுப்பற்ற கருத்துகளைத்தான் அவர் வெளியிடுகிறார். அவர் பிரதமராக இருக்கும் தகுதியையே இழந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.
Follow Us