
திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள வெரியப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒட்டன்சத்திரம் நகரமன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. காளியப்பன், மாவட்ட அவை தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தலைவரின் இந்த இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். தொழில் துறையில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறோம். அதுபோல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை இன்னும் 12 மாதத்தில் நிரந்தரமாக தீர்க்கப்படும்.
இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் 14.25 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தது நிறைவேற்றிக் கொடுக்கப்படும். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி மக்களை சிந்திக்காமல் தன்னிலை ஆட்சியாக இருந்திருக்கிறது. இலவசத்தை எதிர்த்து வந்த மோடிக்கு தற்பொழுது தேர்தலில் தோல்வி பயம் வந்ததால் கர்நாடகா தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். அது எடுபடாது” என்று கூறினார்.