Skip to main content

'பதற்றத்தில் உள்ளார் மோடி; ஜூன் நான்கோடு முற்றுப்புள்ளி'-திருமாவளவன் பேட்டி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
nkn

'பிரதமர் மோடி அண்மைக்காலமாக பேசி வருகின்ற கருத்துகள் யாவும் அவர் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார், தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது'  என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''மதத்தினை வாக்கு வங்கியாக பயன்படுத்தக்கூடிய அரசாக பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பகுஜன் ஒற்றுமை எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய இந்த பகுஜன் சமூகத்தினரின் ஒற்றுமை முக்கியமானது. இட ஒதுக்கீட்டுக்கும் சமூகநீதி கோட்பாட்டுக்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும், சமூகநீதி கோட்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் வலியுறுத்தி இருக்கிறேன்.

ஓபிசி சமூகத்தினருடைய இட ஒதுக்கீட்டுக்காக, பகுஜன் ஒற்றுமைக்காக பாடுபட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும், கான்சிராம் அவர்களையும், மண்டல் அவர்களையும் நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். இந்த தேர்தலில் மக்கள் சமூகநீதிப் பக்கமே நிற்கிறார்கள். சமூக நீதிக்கு ஆதரவானவர்கள், சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்ற அடிப்படையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அமைந்திருப்பதாக கருதுகிறேன். அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் என்ற அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான பாசிச சக்திகள் வீழ்த்தப்படுவார்கள்.

nnஅரசியலமைப்புச் சட்டத்தை ஆதரிக்கக்கூடிய வகையில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பிறகும் நமது பிரதமர் ஆற்றும் உரை மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. அவர் அண்மைக்காலமாக பேசி வருகின்ற கருத்துகள் யாவும் அவர் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார், தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக இந்து சமூகத்தினரின் தாலியைப் பறித்து முஸ்லிம்களும் ஒப்படைத்து விடுவார்கள் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தவர்கள் என்று அவர் பேசியதும் சரி, ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னதும் சரி, அடுத்தடுத்து அமித்ஷா போன்றவர்கள் பேசி வருகின்ற கருத்துக்களும் சரி, அவர்கள் ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பதற்றத்திற்கு உள்ளாகி வருகிறார்கள், மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆகவே ஜூன் 4-ம் தேதி அன்று வர இருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்''என்றார்

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து வருகிறது” - செல்வப்பெருந்தகை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Undeclared Emergency has been going on in India for last 10 years says Selvaperunthagai

திண்டுக்கல்லில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பேகம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு நாகல் நகர் மேம்பாலம் அருகே மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமையில் ஆள் உயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கைராஜா உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

அதன்பின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மாநகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து மாநிலத் தலைவர் பல கருத்துக்களை கேட்டார். அதற்குமுன் பத்திரிக்கையாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசும்போது, “தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்தரவின்பேரில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் தோறும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு ஏதேனும் மாற்றம் செய்ய இருந்தால் அதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும். கிராமம், நகரம், ஒன்றியம் என எவ்வித பாரபட்சமின்றி அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்கப்படும். பகுஜன சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புலன் விசாரணை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று கூட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் யார் சம்மந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வேறு எதுவும் சொல்லக்கூடாது மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற போது கூட கோட்சே குறித்து காங்கிரஸ் எவ்வித தவறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதேபோல சாவர்க்கர் குறித்தும் தவறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. பா.ஜ.க தலைவர்கள், நிர்வாகிகள் இறந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வருகின்றனர். எமர்ஜென்சி என்பது இந்திராகாந்தி காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்டது. அது தவறான பாதையில் சென்றதால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி நடந்து வருகிறது. 

மின் கட்டண உயர்விற்கு உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டதே காரணமாகும். ஜெயலலிதா இருந்தவரை இந்த திட்டத்தில் அவர் சேரவில்லை. ஆனால் அவா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தில்  சேர்ந்தார். அதனால் தான் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா அரசு மதிக்காமல் செயல்படுகிறது. 40 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க வேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது என்பதற்காக தமிழக மக்களின் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழக மக்களுக்காக காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசைக் கண்டித்தும், போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கு ஆபத்து?; பரபரக்கும் உ.பி

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Yogi Adityanath's Chief Ministership in Danger

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதிக பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணி கட்சி ஆதரவால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். 

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. அந்த வகையில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதிலும், ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்திருந்தது. பா.ஜ.க பெரிதும் நம்பியிருந்த தொகுதியில் தோல்வியடைந்தது என்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடவையாக பார்க்கப்பட்டது. 

இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர் கே.பி.மெளரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்தச் சூழலில் தான், கே.பி.மெளரியா நேற்று முன்தினம் (16-07-24 பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து, உ.பி பா.ஜ.க மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தப் பரப்பரப்பான சூழ்நிலையில், உ.பி அமைச்சரவையை நேற்று (17-07-24) யோகி ஆதித்யநாத் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கே.பி மெளரியா கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலையில், துணை முதல்வர் மெளரியா தனது எக்ஸ் பக்கத்தில் டிவீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அரசை விட கட்சி தான் பெரியது. தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தலைவர்களை சந்தித்த பிறகு, மெளரியா வெளியிட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பதிவின் மூலம் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை நேற்று இரவு யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.