Skip to main content

தமிழக பட்ஜெட்டில் நிதி ஓதுக்கியதை மத்திய அரசு கொடுத்ததாக சென்னையில் மோடி பச்சையாக பொய் சொல்கிறார் :கே.பாலகிருஷ்ணன் 

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
cbm

 

கடலூரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று(28ம்தேதி) பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு துவங்குகிறது. அடுத்து 11ம் வகுப்பிற்கும், பத்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது இதில் தமிழகம் முழுவதும் பல லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தின் எதிர்கால தலைமுறையினர் அவர்கள் தான். அவர்கள் வெற்றிபெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களையும், பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

 

அதே நேரத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சப்படுத்துவதோ, பயமுறுத்துவதோ கூடாது. அதில் அரசும், கல்வித்துறையும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இயல்பான நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதும் போதுதான் அவர்களின் திறமை வெளிப்படுத்த முடியும், கூடுதல் மதிப்பெண், கூடுதல் தேர்ச்சி பெறமுடியும்.

 

நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கல்வி துறையே மாணவர்களை வடிகட்டுகிற முறை இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி இருந்தால் அது தவறு. தேர்வு பயத்தில் 25 சதவீத மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் வருகின்றனர். அவர்கள் மூன்று மணி நேரம் பட்டினியாக இருப்பது வருத்தமாக இருக்கிறது. இடையில் அவர்களுக்கு தேனிரோ, பாணமோ வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அனைத்துக்கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று கூறினார்கள். சென்னை வந்த பிரதமர் இது குறித்து ஒருவார்த்தைக்கூட பேசவில்லை. துறையின் அமைச்சர் நிதின் கட்காரி சொல்லும் போது காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சாத்தியம் இல்லை என்று கூறியது அதிரிச்சி அளிப்பதாக உள்ளது. உச்சநீதிமன்றமே 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று சொல்லிய பிறகும் அமைச்சரே நீதிமன்ற தீர்பை அவமதிக்கும் வகையில் பேசியதாகத் தான் தெரிகிறது.

 

 இந்த நிலையில் மாநில முதல்வர் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும் என கூறி வருகிறார். முதல்வர் மீண்டும், மீண்டும் இதுபோன்று பேசி வருவது தமிழக மக்களை நம்பவைத்து கழுத்தருக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

 

தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலை கூடாது.  மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து திட்டங்களை பெறுகிறோம் என்று கூறுகிறார்.  பச்சையாக தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்கிறது. இதுவரைக்கும் இணக்கமாக இருந்து என்ன,என்ன திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. நீட் தேர்வில் கடைசி வரைக்கும் வஞ்சிக்கப்பட்டோம், காவேரிமேலைண்மை வாரியம் அமைக்கப்படவில்லை, ஒக்கி புயலுக்கு பணம் தரவில்லை, வறட்சி, வெள்ள நிவாரணத்திற்கும் பணம் தரவில்லை. மண்ணெண்ணை அளவை உயர்த்தி வழங்கவில்லை,  அரிசி விலையை உயர்த்தி விட்டனர் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பாக்கி பணம் ரூ.7200 கேடி தரவில்லை இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு என்ன வாங்கி கொடுத்துவிட்டீர்கள்.

 

இணக்கமாக இருந்தது உங்களுடைய பதவியை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் பயன்படலாம். தமிழக மக்களுக்கு பயன்படாது. ஏற்கனவே அமைச்சர்கள் அதிகாரிகள் வீட்டுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. தமிழ்நாட்டில் நடந்த சோதனைபோல் எந்த மாநிலத்திலும் நடைபெற வில்லை இந்த சோதனையிலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ள மட்டும்தான் இந்த இணக்கம் பயன்படும். இணக்கமாக இருக்கிறோம் என்று கூறி காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் கைவிட்டுவிடக்கூடாது.

 

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர் கட்சிகளையும், விவசாயிகள் சங்கங்களையும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் அனைவரும் ஒன்று கூடி அரசை இதற்குமேலும் நம்பி பலனில்லை என்கிற சூழ்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

 

 தமிழக பட்ஜெட்டில் நிதி ஓதுக்கியதை மத்திய அரசு கொடுத்ததாக சென்னையில் மோடி பச்சையாக பொய் சொல்கிறார்.

 

விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும், இந்தாண்டு காவேரியில் தண்ணீர் இல்லாமல் கடை மடையில் நாலே கால் லட்சம் ஏக்கர் நெற்பயிர் காய்ந்து அழிந்து விட்டது. அதையும் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் 6 மாதங்களுக்குள் மாற்றப்பட்டுள்ளார்.  சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தகுதியின் அடிப்படையில் ஆட்சியர்  நியமித்தார். தற்போது கால்நடை உதவியாளர்கள், ரேஷன்கடை பணியாளர்கள் நியமனங்கள் உள்ளன இவர் இருந்தால் ஆளும் கட்சியினர் கள்ளாக்கட்டமுடியாது என நினைத்த அவரை உடனடியாக மாற்றிவிட்டனர். புதிய ஆட்சியர் வந்து அடுத்த நாளே புதிய நியமனங்களுக்கு நேர்முகத்தேர்வு என்றால் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நிர்வாகங்களை ஊழல் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு செய்து வருகின்றனர்.

 

கரும்பு பண பாக்கி கேட்டு மார்ச் 6ம் தேதி முதலமைச்சர் வீட்டு முன்பு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கூடிய காவல் துறையை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றால் ஜனநாயக இயக்கங்களை முடமாக்குவது, தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  இதனால் சமுகவிரோதிகளும் சர்வ சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள்.  குற்றங்கள் அதிகரித்து வருகிறது, காவல் துறை இருக்கு என்கிற அச்சமே இவர்களுக்கு இல்லை.

 

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிற நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. சமுகவிரோத கும்பல் இதை செய்து வருகிறது. வெள்ளம்புதூர் கிராமத்தில் இது மூன்றாவது சம்பவம். 2ம் தேதி நேரடியாக சென்று விசாரிக்க உள்ளோம், தேவைப்பட்டால் அனைத்துக்கட்சிகளையும் ஒன்றினைத்து தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை எடுப்போம் இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான மோதலாக ஆக்க கூடாது.  இது சமுக விரோத நடவடிக்கை என்கிற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 சேலம், விழுப்புரம், கல்வராயன் மலைப்பகுதியை சார்ந்தவர்கள் ஆந்திராவில் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். பலர் காணமல் போய்யுள்ளனர். எங்களுடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன், வாசுகி, செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டெல்லிபாபு ஆகிய 5 பேர் கொண்ட விசாரணைக்குழு மார்ச் 2 ம் தேதி அந்த மலை பிரதேசங்களுக்கு சென்று நேரடியான விசாரணை மேற்கொள்கிறார்கள்.

 

அந்த விசாரணையின் அடிப்படையில் அதன் அறிக்கையை தமிழக அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் வழங்கி அதன் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை குறி வைத்து  தாக்கும் ஆந்திர அரசு செம்மரம் கடத்தும் கடத்தல் கும்பலை ஏன் கண்டுகொள்ளவில்லை  என்றார். இவருடன் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், நகர செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்