“Modi is being degraded as a tea seller” - JP Natta

பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து 9 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அரசின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்ததையொட்டி ராகுல் காந்தி, ‘வெறுப்பை பரப்பும் சந்தையை மூடிவிட்டு அன்பிற்கான கடையைத்திறங்கள்’ என்று பா.ஜ.க.வை சாடியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் பா.ஜ.கவின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “எப்பொழுதெல்லாம் மோடி சர்வதேச அரங்கில் பாராட்டப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் வருத்தம் அடைந்து கோபப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மோடியை எதிர்க்க முயற்சிக்கும் போது இந்திய நாட்டையும் எதிர்க்க தொடங்குகிறார்கள். ராகுல் காந்தி ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறுவதற்காகவே இங்கிலாந்து சென்றார்.

ஜனநாயகத்தை பற்றி பேசும் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது 1975 ஆம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தினார். அந்த சட்டத்தால், 1.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ராகுல் காந்தி தற்போது ஜனநாயகத்தை பற்றிப் பேசி வருகிறார் என்பதே முரணாக இருக்கிறது. பிரதமர் மோடி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் அவரை பாம்பு, தேநீர் விற்பவர் என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளைக் கூறி வருகின்றனர். மோடியை பற்றித்தொடர்ந்து வெறுப்பை பரப்பும் ராகுல் காந்தி அன்பிற்கான கடையை அல்ல, வெறுப்பு சந்தையை நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.