ADVERTISEMENT

மேடையில் வாக்குக் கொடுத்த ஸ்டாலின்... கண் கலங்கிய வைகோ!

10:35 AM Feb 25, 2019 | vasanthbalakrishnan

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மதிமுக சார்பில், வைகோ தலைமையில், 'தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா'வும் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய 'தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை' என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT



விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, ‘‘ஆரியப் பகை சூழ்ந்து வரும் போது கரிகால் பெருவளத்தான் வீறு கொண்டு எழுந்து வீழ்த்தியதைப் போல, சூழ்ந்து வரும் சனாதன பயங்கரவாதத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காக்க, திராவிட இயக்கத்தை காக்க, இனத்தை, பண்பாட்டைக் காக்க இளைஞர்கள் வீறு கொண்டு வர வேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் சொல்வது போல் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தை வழிகாட்டுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை நான் வழிமொழிகிறேன்’’ என்றார்.

ADVERTISEMENT



தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘மதிமுக சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுக்கு அருகில் ஸ்டாலினா? என்று சிலருக்கு சந்தேகம். இல்லை.... வயிற்றெரிச்சல், பொறாமை. திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் சிலருக்கு எரிச்சல். கலைஞரால் போர் வாள் என்றழைக்கப்பட்டவர் வைகோ. தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் திராவிட இயக்கத்தைக் காக்க இணைந்துள்ளோம். வயது முதிர்ந்த நிலையில் தலைவரைச் சந்தித்த போது, "அண்ணா உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன்" என்றார் அண்ணன் வைகோ. பலமுறை இதைக் கூறியுள்ளார். அண்ணன் அவர்களே, நீங்கள் எனக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, நானும் உங்களுக்குத் துணையாக நிற்பேன் என்று வாக்குறுதி கொடுக்கத்தான் இந்த விழாவுக்கே வந்தேன்" என்று அவர் கூற அரங்கமே இரு கட்சி தொண்டர்களின் உற்சாகக் கரகோஷத்தால் அதிர்ந்தது.

மேடையில் அமர்ந்திருந்த வைகோ, ஸ்டாலினின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து கண் கலங்கினார். ஸ்டாலின், கலைஞர் - வைகோ உறவு குறித்து பேசும்போதே நெகிழ்ந்து காணப்பட்ட வைகோ, ஸ்டாலின் தனக்கு துணையாக நிற்பேன் என்ற வாக்குறுதியை அளிக்கத்தான் இந்த விழாவுக்கே வந்தேன் என்று கூறியபோது உடைந்து கண் கலங்கி தனது கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT