ADVERTISEMENT

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்... முதல்வரின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன்: மு.க.ஸ்டாலின் கண்ணீர்

12:59 PM Aug 14, 2018 | rajavel


திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,

ADVERTISEMENT

தலைவரின் உடல் அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்கு பக்கத்தில் கொண்டு போய் அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல, தலைவர் எடுத்த முடிவு. ஆகவே அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு நாம் எவ்வளவோ பாடுபட்டோம்.

ADVERTISEMENT

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்களெல்லாம் எங்களிடத்தில் சொல்லுகிறார்கள், இவ்வளவு நேரம்தான் அவருடைய உயிர் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது என சொல்கிறபோது, இனி காப்பாற்றுகிற வழியில்லை. முடிந்தவரை நாங்கள் போராடியிருக்கிறோம். இந்த சூழல் வரக்கூடிய நேரத்தில் நாங்களெல்லாம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

சோகத்திலே கண்ணீர் மல்க நாங்கள் மருத்துவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்தாலும், நமது முன்னோடிகளெல்லாம் தலைவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று பேசிக்கொண்டிருந்தபோது, பல நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்திகளை சொல்லி அனுப்புகிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வரக்கூடிய செய்திகள், தலைவர் கலைஞருடைய ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் அந்த செய்திகள் வந்து கொண்டிருந்தது.

அதற்கு பிறகு நமது முன்னோடிகளெல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள், நாமாக நேரடியாக முதல் அமைச்சரை சந்திப்போம். சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தால் அவர்கள் நிச்சயம் நிறைவேற்ற வருவார்கள் என்று சொன்னபோது, நான் தயாரானேன். அப்போது நமது முன்னோடிகள் சொன்னார்கள். நீ வர வேண்டாம், நாங்கள் போகிறோம். நீ ஒரு செயல் தலைவர். நீ தலைவருடைய மகன். நீ எக்காரணத்தைக்கொண்டும் வரக் கூடாது. அவர்களை சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில், இல்லை இல்லை என்னுடைய மானம், மரியாதை, கவுரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்க தயார் என்று சொன்ன பிறகு நாங்களெல்லாம் சென்று முதல் அமைச்சரை சந்தித்தோம்.

சந்தித்து எங்களுடைய கோரிக்கையை எடுத்து சொல்லுகிறோம். சொல்லுகிறபோது முதல் அமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளில் கொடுக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் லீகல் ஒப்பீனியன் கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள். அப்போது நான் சொன்னேன், அரசு சொல்லக்கூடிய எண்ணத்தைத்தான் அரசு வழக்கறிஞர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.

இன்னும் கூட வெட்கத்தை விட்டு சொல்லுகிறேன். முதல் அமைச்சருடைய கைகளையெல்லாம் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன். தலைவருடைய ஆசை, அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன். அப்போது கூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக எங்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக பார்ப்போம் என்று ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதனை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.

மருத்துவமனையில் வந்து அமர்ந்திருக்கிறோம். சரியாக 6.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே சொன்னார்கள். உடனடியாக ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் முன்னோடிகள் சிலரோடு அந்த கடிதத்தை கொடுத்து முதல் அமைச்சர் வீட்டுக்கு அனுப்புகிறோம். முறையாக கேட்க வேண்டும் என்பதற்காக. எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள். அடுத்த 10வது நிமிடத்தில் வந்துவிட்டார்கள். என்ன என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள் என்று அண்ணன் துரைமுருகன் சொல்கிறார்கள்.

என்ன செய்வதுதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சியில் தலைமைச் செயலாளருடைய அறிவிப்பு வருகிறது. திமுக செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்கு பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது என்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வழக்கறிஞர் வில்சன் உள்ளே வருகிறார். அவர்களிடத்திலே விவாதித்தோம். நீதிமன்றத்திற்கு செல்லட்டுமா என்று கேட்கிறார். இரவே நீதிபதியை சந்திக்கிறோம். மனு அளிக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள்.

அதற்கு பிறகு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகு மறுநாள் காலை 8 மணி, 8.30 மணிக்கு தீர்ப்பு வரும் என்று காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய வழக்கறிஞர் சண்முக சுந்தரம், விடுதலை இன்னும் சில நமது கழக வழக்கறிஞர்களெல்லாம் ஒன்று சேர்ந்து வில்சனின் தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்கு தீர்ப்பு வருகிறது. அண்ணாவினுடைய சமாதி அருகிலே தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்யலாம் என்ற தீர்ப்பு வருகிறது.

நாங்கள் தலைவரின் உடலுக்கு பக்கத்தில் இருந்து அழுதுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குக்கூட இந்த செய்தி முதலில் வரவில்லை. ஆனால் எதிரில் திரண்டிருக்கக்கூடிய லட்சக்கணக்கான தோழர்களுக்கு செல்போனில் அந்த செய்தி வந்து அவர்கள் முழங்குகிறார்கள். அதை பார்த்து, அந்த செய்தியை கேட்டு இவ்வளவு பெரிய சோகத்திலே ஒரு சிறிய மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. நமெக்கல்லாம் ஏற்பட்டது.

உள்ளப்படியே எனக்கு நன்றி சொன்னீர்கள். என்னை பாராட்டீனர்கள். என்னைப் பொறுத்தவரையிலே நான் நம்முடைய வழக்கறிஞர்கள் குழுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்த பெருமை சேரும்... சேரும்...


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT