Skip to main content

“அ.தி.மு.க. அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா? -மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
corona


கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகார போட்டி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே கடுமையாகப் போராடும் கரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்பு பணிகளில் தமிழ்நாட்டை ஆள்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பொறுப்பற்றத்  தன்மையுடனும், துக்ளக்தனமாகவும் இருப்பதால், நோய்த் தொற்று வேகமாகப் பரவி,  பொதுமக்களின் மனதில் நாளுக்கு நாள் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.


சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து திருமதி. பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அவர்கள் மாற்றப்பட்டு, திரு. ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிகாரிகளை அவ்வப்போது நிலைமைகளுக்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும் இடமாற்றம் செய்வது ஆட்சியாளர்களின் உரிமை என்றபோதும்; இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், அதில் உள்ள அரசியல், சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும், அயற்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

ஊரடங்குக்கு முன்பாக மிகக் குறைந்த அளவில் இருந்த கரோனா நோய்த் தொற்று என்பது கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அன்று 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டுமே 28 ஆயிரத்துக்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதும், நாளுக்கு நாள் சுழன்றடிக்கும் சூறாவளியாக, அதிவேகமாகப் பரவி வருவதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. 

சென்னை என்ற சொல்லைக் கேட்டாலே, தமிழ்நாட்டின் பிற பகுதி மக்கள் பதறுகிற நிலைமை உருவாகியிருக்கிறது. ஊரடங்குக்கு முன் தமிழகத்தில் ஒருவர்கூட கரோனா நோய்த்தொற்றால் மரணமடையாத  நிலையில், தற்போது இறப்பின் எண்ணிக்கை 367 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகளைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, ‘கோவிட்-19 பாசிட்டிவ்’ நோயாளிகள் இறந்திட நேரும்போது, ‘நெகட்டிவ்’ எனக் குறிப்பிடப்படுவது குறித்துத் தொடர்ந்து ஆதாரப்பூர்வமான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. 

அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பு செவிலியர் திருமதி. ஜோன் மேரி பிரிசில்லா அவர்கள் மரணமடைந்தபோது, அவரது ‘கேஸ் ஷீட்டில்’ ‘பாசிட்டிவ்’ என்றிருந்த நிலையில், இறப்பு அறிக்கையில் ‘நெகட்டிவ்’ எனக் குறிப்பிடப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினரும், மருத்துவத்துறையினரும் எழுப்பிய கேள்விகளுக்கு வெளிப்படைத் தன்மையிலான எந்தப் பதிலும் இல்லை. குறைப்பதும், மறைப்பதும், மழுப்புவதுமே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக உள்ளன.

இறப்புகள் குறித்த சென்னை மாநகராட்சியின் கணக்குக்கும் சுகாதாரத்துறை கணக்குக்கும் வேறுபாடு இருப்பதைப் பல நாளிதழ்களும் வார இதழ்களும் சுட்டிக்காட்டியுள்ளன. 


சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், சுகாதாரத்துறை இணை இயக்குநர் வடிவேலன் அவர்கள் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை தொடர்ந்துதான் சுகாதாரத்துறைச்  செயலாளர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது. 

நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் அதே நேரத்தில், பரிசோதனைகள் குறித்தும், தனிமைப்படுத்துதல் குறித்தும் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளே வெளியிடப்பட்டு வருகின்றன.  

‘வீட்டில் ஒருவருக்குக் கரோனா என்றாலும் குடும்பத்தினர் அனைவரும் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்’, ‘கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாள் தனிமை’ என்றெல்லாம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து, பொதுமக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அடுத்த சில மணித்துளிகளில் சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அதனை மறுத்து, விளக்கம் என்ற பெயரில் மேலும் குழப்பமான பேட்டிகளை அளிக்கிறார். அதுபோலவே, சென்னையில் 20 ஆயிரம் படுக்கைகள் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , 17 ஆயிரம் படுக்கைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் இருப்பது ஏன்? உண்மைகள் உறங்கும்போதுதானே, முரண்பாடுகளுக்குச் சிறகுகள் முளைக்கும்? ஆலோசனைகளையும் முடிவுகளையும் யார் எடுக்கிறார்கள்? சுகாதாரத்துறையின் கைகளை மீறி - அதன் அதிகார எல்லையைப் புறக்கணித்துச் செயல்படுகிறார்களா? சுகாதாரத்துறையில் அமைச்சர் - அதிகாரிகளிடையே குழு மனப்பான்மைப் போட்டியினால்,  இந்தக் குழப்பங்களா? எடப்பாடி பழனிசாமிக்கு மேலே, அவரை விஞ்சிய  “சூப்பர்” முதல்வர்களின் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா?  குழுக்களாக, வெவ்வேறு திசை நோக்கிச்  செயல்படும் இந்த அரசியல் - அதிகாரப் போட்டிக்கும், ஊழல்களுக்கும் அப்பாவி மக்களின் உயிரை அநியாயமாக கரோனாவுக்கு பலிகடா ஆக்குவதா எனப் பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

 

mk stalinமூன்று நாட்களில் தமிழ்நாட்டில் கரோனா ஒழிந்துவிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னை ஒரு தலைசிறந்த டாக்டராகப் பாவித்து, அறிவித்து ஒருமாத காலத்திற்கு மேலான நிலையில், பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர், ஜூலை மாதத்தில் நோய்த்தொற்று பரவல் மேலும் கடுமையாக இருக்கும் என அரசின் சார்பில் தெரிவிக்கிறார். 

முதலமைச்சரோ, சமூகப் பரவல் இருந்தால் நீங்களும் நானும் இப்படி இருக்கமுடியுமா என ஊடகத்தினரிடம் ஏகடியம் பேசியபடி, அவரே அறிவித்த பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணியாமல், இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், கட்சிக்காரர்கள் அதிகாரிகளுடன் கூடி  நின்று, அணை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

அடுத்தடுத்த மாதங்களில் கரோனா பரவல் எந்தளவுக்கு வேகமாக இருக்கும் என்பது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தனது ஆய்வு முடிவுகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது. அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்து, அவர்களைப் பாதுகாத்திட வேண்டிய அரசு, கரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என வீண் தம்பட்டம் அடித்துக் காலம் கழிக்கிறது.

 

nakkheeran appநிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிற பேரிடர் சூழலில் இனியேனும், முறையான - வெளிப்படையான தன்மையுடன் செயல்பட்டு, பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்துவதுடன், எத்தனை நோயாளிகள் - எவ்வளவு பரிசோதனைகள் - எத்தனை மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த இக்கட்டான கட்டத்தில், பேரிடர் தணிப்புப் பணிகளில், அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள். அப்படிப்பட்ட முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட, சுகாதாரத் துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்வைக்கப்படும் கருத்தும் அலட்சியப் படுத்தப்படக்கூடியதல்ல! " என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் விசாரிக்க வேண்டும்' - பெண் தற்கொலையில் சிக்கிய பரபரப்பு கடிதம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
'chiefminister should investigate'-a letter from a woman involved  incident

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதம் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெங்களூரிலிருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார்  குஜராத் விரைந்தனர்.

குஜராத் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சூர்யா தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் தன் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார். தனது கணவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இது குறித்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

அதிமுக திமுக காரசார விவாதம்; வாக்குவாதத்தில் முடிந்த நகர் மன்ற கூட்டம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
DMK AIADMK political debate in Kallakurichi Municipal Council meeting

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே நகராட்சி கூட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை கண்ட அதிமுக கவுன்சிலர்கள் தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு ஒரு இரங்கல் தீர்மானம் இல்லாததாலும், மேலும் நகர மன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை கண்ட சேர்மன் சுப்பராயலு  வாய்மொழியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி தெரிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக நகரச் செயலாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பாபு, “கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் இரங்கல் தீர்மானம் இல்லாமல் இந்த கூட்டம் நடப்பதால் இதிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம்” என்று கூட்டத்திலிருந்து வெளியேறினர். அப்போது நகராட்சி சேர்மன் சுப்புராயலு உடனடியாக எழுந்து மைக்கை பிடித்து மக்கள் முதல்வர் வாழ்க என கோஷம் எழுப்பினார்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்களும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க...” என முழக்கம் எழிப்பினர். இதனால் திமுக கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களும் தங்கள் தலைவர்கள் புகழைப் பாடிக்கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாறி  பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் அதிமுக கவுன்சிலர்கள் இந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வலுவாக கோஷம் எழுப்பி மேஜயை தட்டி பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டு அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்த பட்டியலின மக்களுக்கு விரோதமாக நகராட்சி ஆணையரும் தமிழக முதல்வரும் செயல்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர் வெளியேறிய பின்பு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.