Advertisment

வக்கில்லே.. அருகதையில்லே... யோக்கிதையில்லே...! -மு.க. ஸ்டாலின் பேச்சு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

Advertisment

பல போராட்டங்களுக்கு இடையே, அதில் வெற்றி கண்டு, அதன் நீட்டியாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கலைஞரின் மறைவிற்குப் பின்னால், முதன்முதலில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கலைஞரின் குருகுலமாக விளங்கிய இந்த ஈரோட்டில் 2019 ஜனவரி மாதம் தி.மு.க.வுக்கு சொந்தமான இடமான ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டது. அதன் பின் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலும், திருச்சியிலும் கலைஞரின் சிலை திறக்கப்பட்டது. கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலி வளாகத்தில் கலைஞரின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். அதன் பின் தற்போது ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தில் இருந்து, தியாகங்கள் செய்து, இயக்கத்திற்காக பாடுபட்டு, திராவிடக் கொள்கைகளை பரப்பிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏ.டி. பன்னீர்செல்வம் பெயரில் அமைந்த பன்னீர்செல்வம் பூங்காவில், தமிழகத்திற்கு பல தியாகங்கள் செய்த கலைஞரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஒரு போராட்டத்திற்கிடையே கலைஞரின் சிலை இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

mk stalin speech erode

Advertisment

கலைஞரின் வாழ்க்கையே போராட்டம்தான். அவர் மாணவப் பருவத்தில் இருந்தபோது, திருவாரூரில் உள்ள பள்ளியில் சேர வேண்டும் என சென்றபோது, நீ சீர்த்திருத்தவாதி, சுயமரியாதைக்காரன் எனக் கூறி அவரை பள்ளியில் சேர்க்க மறுத்தனர். அந்த பள்ளியின் எதிரே உள்ள கமலாலயம் குளத்தில் நின்று கொண்டு, பள்ளியில் சேர்க்காவிட்டால் குளத்தில் குதித்து தற்கொலை செய்வேன் என போராட்டம் நடத்தினார். பள்ளி நிர்வாகம் அவரது போராட்டத்தைப் பார்த்து அஞ்சி, நடுங்கி அவரைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். பள்ளியில் சேர்வதற்கே போராட்டம் நடத்தியவர்.

எனது தாயார் தயாளுவுக்கும் தலைவருக்கும் திருமணம் நடந்தபோது, இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு போய்விட்டுத்தான் வருவேன் எனக்கூறி, கழுத்தில் மணமாலையோடு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, அதன்பின் தனது திருமணத்தை முடித்துக் கொண்டார்.

அதேபோல், டால்மியாபுரம் என்ற வடமொழிப் பெயரை மாற்றி, கல்லக்குடி என அறிவிக்க வேண்டுமென ஓடும் ரயில் தண்டவாளத்தில் படுத்து, ரயிலை நிறுத்தி, போராட்டம் நட்த்தி அதிலே வெற்றி கண்டவர் கலைஞர். 1966ம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டபோது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் வாடியவர்.

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது, கலைஞர் முதல்வராக இருந்தார். அப்போது இந்திராவின் தூதராக இருவர் வந்து, முதல்வர் கலைஞரைச்ச் சந்தித்தனர். ‘நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை; எதிர்க்கக் கூடாது என்று தெரிவித்தனர். அப்படி எதிர்த்தால் உங்கள் ஆட்சி உடனடியாகக் கவிழ்க்கப்படும். எதிர்க்காமல் இருந்தால் ஆட்சி நீடிக்கும் என அவர்கள் சொன்னபோது, எங்கள் உரிமையைக் காக்க ஆட்சி அல்ல, எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன் எனக்கூறி, நெருக்கடி நிலையை கலைஞர் எதிர்த்தார்.

வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, அவர் மறைந்த காலத்திற்குப் பிறகு நடந்த போராட்டம்தான், அவர் இன்றைக்கு மெரினா கடற்கரையில் அண்ணாவுக்கு பக்கத்தில் ஆறு அடி நிலத்தைக் கூட போராடித்தான் பெற்றார்.

ஐந்து முறை முதல்வராக இருந்து, தமிழினத்திற்கு பாடுபட்ட கலைஞர் ஓய்வெடுக்க ஆறு அடி நிலம் தர மறுத்த ஆட்சி இது. தமிழுக்கு செம்மொழி அந்தந்து, வள்ளுவருக்கு சிலை, வள்ளுவர் கோட்டம் என தியாகிகளுக்கு, தமிழறிஞர்களுக்கு பெருமை சேர்த்த கலைஞருக்கு, இந்த அரசு ஆறு அடி நிலம் தர மறுத்தபோது, தற்போது ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுள்ள வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றம் சென்று வழக்கு போட்டார். அந்த வழக்கில் நாம் வெற்றி பெற்றோம். நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று அதன்பின் தான் அண்ணாவிற்குப் பிறகு அவர் அருகில் கலைஞர் ஓய்வெடுக்கிறார்.

கலைஞரின் பிறந்தநாள் காலத்தில் இருந்து பள்ளிப்பருவம், திருமணம், அரசியல், ஆட்சிப்பொறுப்பு மட்டுமல்லாது நம்மை விட்டு மறைந்தபோதும் வாழ்க்கையே போராட்டமாக இருந்துள்ளது. அதற்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கும் நீதிமன்றத்திற்குச் சென்று போராடி, அதில் வெற்றி பெற்று சிலையைத் திறந்துள்ளோம்.

கலைஞர் மறைந்து ஓராண்டைத் தாண்டி, இரண்டாம் ஆண்டை நோக்கி நாம் செல்கிறோம். இன்னமும் அரசியல் உலகில் அவர் பெயரைச் சொல்லாமல், நினைவை கூராமல் நாம் எதையும் நினைவு கூற முடிவதில்லை. அவர் நினைவோடுதான் எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மறைந்தார். அவரது ஆட்சிதான் தற்போது நடந்து வருகிறது. அந்த அம்மையாரின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிற இந்த ஆட்சியாளர்கள் அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரைக்கும் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு இரங்கல் கூட்டத்தைக் கூட கூட்டவில்லை.. நமக்கும் அந்த அம்மையாருக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், அவரால் பதவி சுகம் அணுபவித்தவர்கள், இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. இவர்களுக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சொல்ல வக்கில்லே.. அருகதையில்லே... யோக்கிதையில்லே...

ஆனால், கலைஞரின் மறைவிற்கு பின், தமிழகம், இந்திய தலைவர்கள், நீதியரசர், கலையுலகம், மருத்துவர், கல்வி, சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவர்களை அழைத்து நாம் தொடர்ந்து நினைவுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். இன்றும் அவரது பெருமையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஈரோட்டில் இன்று கலைஞருக்கு இரண்டாவது சிலை அமைக்கப்பட்டது போல், தமிழகம் முழுவதும் அரசின் அனுமதியோடு கலைஞரின் சிலை திறக்கப்படும். இந்த சிலை வைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடத்திருந்தபோது, தீர்ப்பு வரும் முன்பே இந்த ஆட்சியாளர்கள் அனுமதி தந்துள்ளனர் என்பது நமக்குக் கிடைத்த வெற்றி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

kalaingar Erode Speech mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe