Skip to main content

“தமிழ்நாடு வளருவதை எந்த மோடிமஸ்தான் வித்தைகளாலும் தடுக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
mk stalin said No Modimastan tricks can stop the development of Tamil Nadu

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தத் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்கினார். அதோடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜா, பெரியகுளம் முன்னாள் நகர செயலாளர் செல்லப்பாண்டி, போடி தொகுதி பொறுப்பாளர் ஜெயன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

mk stalin said No Modimastan tricks can stop the development of Tamil Nadu

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தென் மாவட்ட மக்களின் குலசாமியாக மதிக்கப்படும் பென்னிகுவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்திருக்கிறேன். வைகை ஆறும் - கொடைக்கானல் மலையும் - பக்தர்களுக்கான பழனியும் - அடங்கிய திண்டுக்கல் தொகுதிப் பரப்புரைக்கும் சேர்த்தே வந்திருக்கிறேன். இது தேர்தல் பரப்புரைக் கூட்டமா? அல்லது வெற்றி விழா மாநாடா? என அனைவரும் வியக்கும் அளவிற்கு இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

கட்சிக்குத் தென்பாண்டி மண்டலத்தில் கிடைத்த பெரிய சாமிதான் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி. அவரை பார்ப்பதற்கு நரை தட்டியிருந்தாலும், அவர் உழைப்பிற்கு நரை தட்டவில்லை. ஐ.பெரியசாமி உழைப்பே தேனி திண்டுக்கல் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேனி நாடாளுமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தங்க தமிழ்ச்செல்வன் மண்ணின் மைந்தர். தி.மு.க.வின் கொள்கைப் பரப்பு செயலாளர். தேனி வடக்கு மாவட்டத் தி.மு.க. செயலாளர். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட செயல்வீரர். விவாதங்களில் சிரித்தபடியே சீறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவரது குரல் தேனி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தோழர் பாலகிருஷ்ணன் ஆதரவு பெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சச்சிதானந்தம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நாற்பது ஆண்டுகால மக்கள் பணிக்குச் சொந்தக்காரர். மாணவர்கள் – இளைஞர்கள் – உழவர்கள் – தொழிலாளிகள் என அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். இவர்களது குரல் திண்டுக்கலின் குரலாக - நாடாளுமன்றத்தில் ஒலிக்க அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி சார்பில், நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் இந்த இரண்டு வேட்பாளர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா?

இந்தியா கூட்டணி மக்களுக்கான சாதனைகளைச் செய்யக்கூடிய நம்பகமான கூட்டணி. நாளை சாதனைகளாக மாறப் போகும் திட்டங்களை வாக்குறுதிகளாகத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், பேபிஅணை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்படும். வாழை மற்றும் திராட்சைக்கு மதிப்புக் கூட்டல் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். உசிலம்பட்டி, தேனி, போடிநாயக்கனூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்படும். போடி – கொட்டுக்கோடு ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்க அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் – சபரிமலை இடையே இரயில் சேவை அமைக்கப்படும். முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து ஆண்டிப்பட்டி கண்மாய்களுக்கு வழங்கப்படும்.

திண்டுக்கலில் இருந்து சென்னைக்குத் தனி இரயில் வசதி ஏற்படுத்தப்படும். அது மட்டுமல்ல, பத்தாண்டுகளாக மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தொழிலாளர் விரோத சட்டங்கள், ஜி.எஸ்.டி. சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும், வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இப்படி தமிழ்நாட்டின் குரலாகத் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தெற்கின் குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலிக்கிறது.

சகோதரர் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில், முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும். நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு, 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். SC,ST,OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும். விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் தரப்படும் உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

மாநிலங்களுக்கும் நாட்டிற்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கிறது. நாம் சொல்லியிருக்கும் அனைத்தையும் செய்யும் காலம் கனிந்து வருகிறது. நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல, நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வரமுடியும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், மக்களைப் பற்றி இரக்கம் கொள்கிற ஒரு மனிதர் பிரதமர் ஆகும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், தமிழ்நாட்டை மதிக்கும் ஒருவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும். எப்படிப்பட்ட பிரதமர் வர வேண்டும் என நாம் நினைக்கிறோமோ, அதேபோல், இப்போதைய பிரதமர் மோடி, எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மனதில் வைத்து நாம் வாக்களிக்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவார்கள். ஒருதாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளைத் தூவி, இந்தியாவையே நாசம் செய்துவிடுவார்கள். மற்றொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இவை அனைத்திற்கும் மேலாக, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

mk stalin said No Modimastan tricks can stop the development of Tamil Nadu

இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் வந்துவிட்டதால், உள்நாட்டிற்குள் டூர் அடிக்கிறார். அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை. அவரே ’ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார். நேற்று சென்னையில் எந்த இடத்தில் ஷோ காட்டினார்? தியாகராயர் நகர். பிரதமர் அவர்களே, அந்த இடத்திற்கு ஏன் அந்தப் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா? உங்கள் ஷோ - ஃபிளாப் ஷோ ஆன உடனே, சமூக வலைத்தளங்களில், சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது, சொல்கிறார். சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போகிறாராம். மோடி அவர்களே… மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… அந்தத் திட்டத்திற்கு தடையாக இருப்பதே நீங்கள்தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது.

கடந்த 2020-இல் ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை. நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை. மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப்பொய் பேசுகிறார்.

சென்னையில் ஷோ காட்டிய மோடி அவர்கள், காலையில் வேலூர் சென்றிருக்கிறார். அங்கு அவர் இந்தியில் பேசும்போது கூட்டம் கை தட்டுகிறது. பலருக்கு என்ன சந்தேகம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து, கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருகிறார்களோ என்பதுதான். இதில், தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி சபதம் எடுக்கிறார் பிரதமர். மோடி அவர்களே… திராவிட மாடலில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டே இருக்கும். இதை எந்த மோடிமஸ்தான் வித்தைகளாலும் தடுக்க முடியாது. அதற்குப்பிறகு, வழக்கம்போல் குடும்ப அரசியல், ஊழல் கட்சி என்று தேய்ந்து போன ரெக்கார்டையே போட்டார். இதற்கு நான் எத்தனையோ முறை விளக்கம் சொல்லிவிட்டேன். உண்மையாக, ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான். தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும், பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்ட உத்தமர்தான் மோடி. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.க.வுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா? அடுத்து, தமிழ்ப் பண்பாட்டிற்குத் தி.மு.க. எதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களே! உங்கள் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் படிக்கக் கூடாது, புத்தங்களை வாங்கி படிக்க வேண்டும்! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் தமிழர் பண்பாடு! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இதுதான் தமிழர் பண்பாடு! பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? சாதியாலும் – மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் நீங்கள் தி.மு.க.வைக் குற்றம் சாட்டலாமா? இப்போதும், சமூகநீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து கொண்டு, சாதனையாக எதையும் சொல்ல முடியாமல் இப்படி மக்களைப் பிளவுப்படுத்திப் பேசுகிறோம் என்று வெட்கப்பட வேண்டும் நீங்கள்! பத்தாண்டு காலம் ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வேதனைகளை நம்மால் மணிக்கணக்கில் பேச முடியும்!

”தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு ஒரே முழக்கத்தில் நாம் சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி!” சொல்லுங்கள். ”வேண்டாம் மோடி”! இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி”! தெற்கி லிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்க வேண்டும். அமைதியான இந்தியாதான் வளர்ச்சியான இந்தியாவாக வளர முடியும். நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு, அமைதியான இந்தியாவை உருவாக்கி வழங்கும் கடமை வாக்காளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் - இந்தியா வளம் பெறும். குறிப்பாக, தமிழ்நாடு அதிகமாக வளம் பெறும். இங்கே திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் அமைத்து மூன்றாண்டு காலமாக பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். பெருந்தலைவர் காமராசர் அவர்கள் குழந்தைகளைப் பள்ளி நோக்கி வர வைக்க வேண்டும் என்று மதிய உணவுத் திட்டத்தை ஆரம்பித்தார். பெற்றோர்கள் பலர் வேலைக்குச் செல்வதால் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் சாப்பிடாமல் வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, உங்கள் ஸ்டாலின் தொடங்கியிருக்கும் திட்டம்தான் காலை உணவுத் திட்டம்.. 16 இலட்சம் குழந்தைகள் பசியாறும் இந்த திட்டத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதில் ஒரு பெற்றோர் சொல்கிறார்கள். “சாம்பாரில் நிறைய காய்கறிகள் போட்டு செய்கிறார்கள். இதனால் குழந்தைங்களுக்கு ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்கிறது” என்று சந்தோஷப்பட்டுப் பேசுகிறார்கள மற்றொரு தந்தை சொல்கிறார் இப்போதெல்லாம் நாங்கள் வீட்டில் செய்தால்கூட குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. பள்ளியில் மிகவும் நன்றாக இருக்கிறது, அங்கு சென்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான். நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நன்றாகச் சாப்பிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் சுடச்சுட சாப்பாடு வந்துவிடுகிறது” என்று சொல்கிறார்.

இப்படி, ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பப் பெற்றோர்களின் கவலையைப் போக்கி, நம்முடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் அவர்கள் வகுப்பில் சோர்வில்லாமல் தெம்பாகப் பாடங்களைக் கவனிக்கவும் இந்தத் திட்டம் வழிவகுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இதனால் எடை குறைவாக இருந்த மாணவர்களின் எடை அதிகரித்திருக்கிறது. மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது என்று ஆய்வு முடிவுகளும் வந்திருக்கிறது. இந்தப் புரட்சிகரத் திட்டத்தை, இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடான, அமரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் மிகப்பெரிய வளர்ந்த நாடான, கனடா நாட்டிலும் அறிமுகப்படுத்தப் போவதாக அந்த நாட்டுப் பிரதமர் அறிவித்திருக்கிறார். அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பற்றி, தனியார் தொலைக்காட்சி ஒன்று, பெண்களிடம் கருத்து கேட்கிறார்கள். அதில் ஒரு தாய்மார் சொல்கிறார், “ஸ்டாலின் அண்ணன் தரும் இந்த உரிமைத் தொகையில் எங்கள் வீட்டுக்கு மளிகைப் பொருள்கள் வாங்குகிறேன். உண்மையான தேவை இருக்கும் எல்லோருக்கும் இந்தத் தொகை சென்று சேருவதற்கு நானே சாட்சி” என்று சொன்னார்.

இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிரும், எங்கள் ஸ்டாலின் அண்ணன் வழங்கும் தாய்வீட்டுச் சீர் என்று பாசத்துடன் உரிமையோடு இந்த திட்டத்தை கொண்டாடுகிறார்கள். உரிமைத் தொகையால் கிராமங்களில் பணப் புழக்கம் அதிகரித்து, உள்ளூர் சிறு வணிகர்களின் வியாபாரமும் பெருகி இருக்கிறது. இது சமூகப் புரட்சித் திட்டம் மட்டுமல்ல; பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. அடுத்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பேருந்தில், இலவசமாகப் பயணம் செய்கிறோம் என்று சொல்லும் விடியல் பயணம் திட்டம், வெளியூரில் வேலைக்கு செல்லும் மகளிர் பாதுகாப்பாக தங்குவதற்கு, தோழி விடுதி, கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு, மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், விரைவில், மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் “தமிழ்ப் புதல்வன்” திட்டம்! இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத் தரும், “நான் முதல்வன்” திட்டம்! ஒரு கோடிக்கும் அதிகமான பேர் பயனடைந்திருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், சாலை விபத்துகளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி இருக்கும் “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்” இப்படி ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மக்களுக்கு நான் செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டேனா என்று கேட்டால், இல்லை. இன்னும் இன்னும் ஏராளமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு நமக்கு உடன்பாடான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மதிக்கும் ஒன்றிய அரசு அமைய வேண்டும். ஒன்றிய அரசின் கூட்டணியில் நாம் எப்போதெல்லாம் இருந்திருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இது தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அ.தி.மு.க. ஒன்றிய அரசில் கூட்டணி சேர்ந்தால், சுயநலத்திற்காகப் பயன்படுத்தும். தி.மு.க. ஒன்றிய அரசில் இடம்பெற்றால், மாநிலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தும்.

கடந்தமுறை தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்தத் தேனி தொகுதியில் இந்த முறை, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். உறுதி எடுத்துவிட்டீர்களா? தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளையும் வென்று, இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசு மூலமாகத் தமிழ்நாட்டிற்கான எல்லாச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வருவோம்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.