
அரக்கோணத்தில் தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயல் மீது பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் தெய்வச்செயல், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருவதாக அப்பெண் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அரக்கோணத்தில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் பாபுவை (37) போலீசார் கைது செய்தனர். அரக்கோணத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன். ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த சார்? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது. திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்? நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக திமுக வினரிடம் இருந்து’ எனத் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தனது சொந்த தொகுதியான சென்னையில் உள்ள கொளத்தூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-05-25) கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திரும்பத் திரும்ப அரைத்தை மாவையே அரைக்கிற மாதிரி இபிஎஸ் அரைத்து வருகிறார். நான் திரும்பி திரும்பி பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை. நிதி ஆயோக் கூட்டத்திற்கு வெள்ளைக் கொடியோடு நான் போகிறேன் என்று அவர் சொன்னார். நான் வெள்ளைக் கொடியையும் எடுத்துக்கொண்டு போகவில்லை, காவி கொடியையும் எடுத்துக்கொண்டு போகவில்லை என நான் தெளிவாக சொல்லிவிட்டேன். இதையெல்லாம் அவர் வீம்புக்கு பேசி வருகிறார். அதிமுக ஆட்சி கொள்ளையடித்த ஆட்சி. அவரது ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவம், தூத்துக்குடி சம்பவம் இந்த மாதிரி பல்வேறு சம்பவங்கள் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து சொல்ல தான் நேரம் பத்தாது” என்று கூறினார்.