Skip to main content

“பொய்யான தகவல்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் 

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

MK Stalin cuddalore gramasaba meeting speech


“தமிழகம், அனைத்திலும் பின்தங்கிப் போனநிலையில், முதலீடுகளை ஈர்த்து விட்டதாக, வேலைவாய்ப்பை அதிகரித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூரில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசினார். 

 

கடந்த 4ஆம் தேதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடலூர் கிழக்கு மாவட்டம் – கடலூர் சட்டமன்றத் தொகுதி, கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் கிராமசபைக் கூட்டத்தில்’ கலந்துகொண்டார். அதில் அவர் பேசிய முழு உரை. “பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மக்கள் கிராமசபைக் கூட்டத்திற்காக மாலை மூன்று மணியில் இருந்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். காத்துக்கொண்டிருப்பது என்பது உங்களுக்குப் பெரிதல்ல. இன்னும் நான்கு மாதங்கள் மட்டும்தான் காத்திருக்கப் போகிறீர்கள்.

 

இந்த கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடலூர் மாவட்டக் கழகத்தின் செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் இரண்டு நாளைக்கு முன்னால்தான் சொன்னேன்.

 

அவர் ‘வேங்கையின் மைந்தன்’ என்று பெயரெடுத்தவர். ‘திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்’ அதனால், அவர் இந்தப் பணியைத் திட்டமிட்டுச் சிறப்பான வகையில் செய்யவேண்டும் என்று முடிவுசெய்து, இந்த நிகழ்ச்சியை எழுச்சியுடன் நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடன், மற்ற நிர்வாகிகளும் இணைந்து இந்த நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

கிராமசபைக் கூட்டம் என்பது அரசு நடத்த வேண்டிய ஒரு கூட்டம். ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் வருடத்திற்கு 4 முறை இதேபோல் கிராமசபைக் கூட்டத்தை நடத்தி, அந்தக் கிராமத்தில் இருக்கும், ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் குறைகளைக் கேட்டு, அதற்குரிய திட்டங்களைத் தீட்டி. அதற்குரிய நிதியை ஒதுக்கி, அந்தப் பணிகளைச் செய்து தர வேண்டும்.  

 

அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்துபோது கிராமசபைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறோம். வருடத்திற்கு 4 முறை அதாவது காந்தி ஜெயந்தி அன்று நடத்த வேண்டும், சுதந்திர தினவிழா அன்று நடத்த வேண்டும், குடியரசு தின விழா அன்று நடத்த வேண்டும், தொழிலாளர் தினத்தன்று நடத்த வேண்டும்.

 

ஆனால், இப்பொழுது தமிழகத்தில் இருக்கும் அதிமுக ஆட்சி அதை நடத்திக்கொண்டிருக்கிறதா என்று கேட்டால், இல்லை. அதனால்தான் நாம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

 

கடந்த 23ஆம் தேதியிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. நேற்றுக் காலை ஈரோட்டில் பங்கேற்றேன். மாலையில் கரூரில் பங்கேற்றேன். இப்பொழுது கடலூருக்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன்.

 

நான் மட்டுமல்ல, நம்முடைய பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக் கழகத்தின் செயலாளர்கள், நகரக் கழகத்தின் துணைச் செயலாளர்கள், கழகத்தின் செயலாளர்கள், இயக்கத்தின் முன்னோடிகள் அத்தனை பேரும் ஆங்காங்கே நடைபெறக்கூடிய கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, அதைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

முதல் நிகழ்ச்சியாக 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அன்று மாலையே கிராமசபைக் கூட்டத்தை தி.மு.க. நடத்தக் கூடாது எனத் தடைவிதித்து, எடப்பாடி பழனிசாமி அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. நான் உடனே, “இதைச் சச்சரவு செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சட்டரீதியாக சென்று வழக்குகள் போட்டாலும் வெற்றி பெற்றுவிட முடியும். ஆனால் தேவையற்ற குழப்பம் வேண்டாம். கிராமசபைக் கூட்டத்தைத்தானே நடத்தக்கூடாது என்று சொல்கிறார்கள், நாம் ‘மக்கள் கிராமசபைக் கூட்ட’த்தை நடத்துவோம் என்று சொல்லி அறிவித்தேன். அதன்படி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

எதற்காக இதற்குத் தடை போட்டார்கள் என்றால், இவ்வளவு கூட்டத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ஆத்திரம் வருமா? வராதா? இந்தக் கடலூரில் மட்டுமல்ல. எங்கு பார்த்தாலும் எல்லா ஊராட்சிகளிலும், எல்லா கிராம பகுதிகளிலும் இதே போன்ற ஒரு எழுச்சியைப் பார்க்கிறார்கள். பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தக் கிராமசபை கூட்டத்தில் எல்லாரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை என்றாலும், ஒரு பத்துப் பேரைப் பெயர் சொல்லி அழைத்துப் பேச வைத்ததும், அவர்கள் அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை - நீங்கள் எல்லாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ - அந்தப் பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் அவர்கள் சொல்வார்கள்.

 

அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் தொடங்கி, கடைக்கோடி அமைச்சர்கள் வரை செய்யக்கூடிய கொள்ளைகளை, கொலைகளை, ஊழலை, லஞ்ச லாவண்யங்களை - ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் - அதனை நினைவுபடுத்துவதற்கு இந்தக் கிராமசபைக் கூட்டம் பயன்படுகிறது.

 

எனவே, இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து அதற்குத் தடை போட்டார்கள். ஆனால் தடையை மீறி நாங்கள் நடத்துவோம். கைது செய்தாலும் கவலை இல்லை என்ற அந்த உணர்வோடு இந்த கிராமசபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

 

இங்கு எல்லோரும் வந்திருக்கிறீர்கள். அதுவும் பெண்கள், சகோதரிகள், தாய்மார்களை நான் பார்க்கிறேன். நான் நினைத்துப் பார்க்கிறேன், உங்கள் முகத்தை எல்லாம் பார்க்கும்போது, உங்களுடைய புன்முறுவலைப் பார்க்கும்போது, உங்களின் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, நான் பேசாமல் இங்கேயே நின்றுகொண்டு உங்கள் முகங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

 

அந்த உணர்வோடுதான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த கிராமசபைக் கூட்டத்திற்கு அதிகமான அளவில் பெண்கள் வந்திருக்கிறீர்கள். எல்லா இடத்திலும் சகோதரிகள்தான், மகளிர்தான் அதிகமான அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஆண்களெல்லாம் குறைவாகத்தான் உள்ளார்கள். பெண்கள்தான் அதிக அளவில் இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் உங்களைச் சுற்றி நிற்கிறார்கள் என்றால் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எப்படி நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோமோ, அதேபோல் நீங்கள் எங்களுக்குப் பாதுகாப்பு.

 

அதுமட்டுமின்றி, ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் எப்போதும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். தொழில்துறையில், மக்கள் சேவையில் என பல்வேறு துறைகளிலும் ஆண்கள் சாதிக்க பெண்களே உறுதுணையாக இருக்கிறார்கள். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

 

அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்குத் தேவைப்படும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எவ்வளவோ சாதனைகளைச் செய்திருக்கிறார்.

 

அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு என்று சொன்னால் அடுக்கிக்கொண்டே போகலாம். பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை தந்த தலைவர்தான் கலைஞர். 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதைச் சீர்திருத்த மாநாட்டில், தந்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களில் மிக மிக முக்கியமான தீர்மானம்தான் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம்.

 

அதைத்தான் 60 வருடத்திற்கு பின்பு, 1989-ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் நிறைவேற்றித் தந்தார்கள். அதேபோல வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு வழங்கினார்.

 

மறைந்த ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது பஞ்சாயத்ராஜ் சட்டத்தைக் கொண்டு வந்து, உள்ளாட்சிப் பதவிகளில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்றுதான் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பது. அந்தச் சட்டத்தை முதன்முதலில் நிறைவேற்றிய ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை. விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம். ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் கட்டாயமாகப் பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம். ஏழைக் குடும்பத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் படும் துயரைத் தடுக்கப் பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டம் எனப் பெண்களைக் காக்கப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர்தான் நமது தலைவர் கலைஞர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற, ஒரு அற்புதமான திட்டம்தான் மகளிர் சுயஉதவிக்குழுத் திட்டம்.

 

அந்த மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம், 1989-ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தருமபுரி மாவட்டத்தில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும், அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது, சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்த திட்டம்தான் அது.

 

அவர்களுக்கு வங்கிக் கடன் கொடுத்து, மானியம் வழங்கி, சுழல் நிதியைத் தந்து, அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் சிறு சிறு தொழில் செய்துகொள்ள ஏதுவாக நிதி ஒதுக்குவதற்காகத்தான் இந்த மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம் உருவாக்கப்பட்டது.

 

அந்த மகளிர் சுயஉதவிக் குழு உருவாக்கப்பட்ட போது, அந்தத் துறைக்கு நான்தான் பொறுப்பேற்று பணியாற்றி வந்தேன். துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது, நான்தான் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் அந்த மகளிர் சுயஉதவிக் குழுத்திட்ட நிர்வாகத்தை வைத்திருந்தேன்.

 

அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாதத்திற்கு நான்கு முறை ஐந்து முறை சென்றிருக்கிறேன். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில், 4 பேருக்கு மட்டும் வழங்கி விட்டு மற்றவர்களை அலுவலகத்தில் நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதன்பிறகு அந்த உதவியை வாங்க லஞ்சம் கொடுப்பதுடன், அலையவும் வேண்டும். நான் துணை முதலமைச்சராக இருந்த காரணத்தினால் இதை மாற்ற நினைத்து, ‘5000 பேருக்கு கொடுக்க வேண்டுமென்றாலும் சரி, அந்த 5000 பேருக்கும் நான்தான் முழுவதுமாக இருந்து அத்தனை பேருக்கும் கொடுத்துவிட்டுச் செல்வேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டேன். வரிசையாக அவர்களுக்கு நம்பர் கொடுத்து, நம்பர் படி உட்காரவைத்து, நம்பர் படி வரிசையாக மேடைக்கு வரவழைத்து வரிசையாக வழங்குவேன். இந்தக் கடலூருக்கு நான் பலமுறை வந்து மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு அந்தப் பணிகளைச் செய்திருக்கிறேன்.

 

அப்போதெல்லாம், சில தாய்மார்கள் என்னிடத்தில் வந்து வாங்கும்போது, “நாங்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறோம். நீ கூப்பிடும்போது வருகிறோம். நிதியைப் பெற்றுச்செல்கிறோம். ஆனால் நீ ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து நின்றுகொண்டே கொடுக்கின்றாய். உனக்கு கால் வலிக்க வில்லையா?” என்று கேட்பார்கள்.

 

அதற்கு, “சுயநிதியை உங்களிடம் கொடுக்கும்போது, உங்கள் முகத்தில் ஒரு மலர்ச்சியை, மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். அப்பொழுது எனது கால் வலி பறந்து சென்று விடுகிறது” என்று சொல்வேன்.

 

இதை என்னுடைய பெருமைக்காகச் சொல்லவில்லை. கலைஞர் அவர்கள் எந்த எண்ணத்தில், எந்த உணர்வோடு இந்தத் திட்டத்தை உருவாக்கினாரோ அது அவர்களுக்கு முழு அளவிற்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முயற்சியில் நான் ஈடுபட்டேன். கலைஞர் ஆட்சியில் இருந்த 5 முறையும் பெண்களுக்கு இதைப்போன்ற பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார்.

 

ஆனால், இன்றைக்குப் பார்க்கிறீர்கள். எப்படிப்பட்ட ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் உங்கள் அத்தனை பேரையும் பேச வைக்க வாய்ப்பில்லை. ஐந்து பேர் அல்லது பத்துப் பேரை மட்டும் பேச வைக்கப் போகிறேன். சாலைவசதி, குடிநீர் வசதி, 100 நாள் வேலைத்திட்டம், முதியோர் ஓய்வூதியம் போன்ற பிரச்சினைகளைத்தான் அதிகம் சொல்லப் போகிறீர்கள். இதற்கெல்லாம் பொறுப்பான துறை உள்ளாட்சித் துறை.

 

உள்ளாட்சித் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் வேலுமணி. அவர் வேலுமணி அல்ல, ஊழல் மணி. ஒரு கடைந்தெடுத்த ஊழல்வாதி ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. அவர் முதலமைச்சரையே பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு, ஊழல் செய்து கொண்டிருக்கிறார்.

 

அவரிடம் இந்த உள்ளாட்சித் துறை சிக்கி இருக்கிறது. இந்த உள்ளாட்சித் துறையைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன். உள்ளாட்சித்துறை மட்டுமல்ல - தொழில்துறையாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கூடிய காவல்துறையாக இருந்தாலும், வேறு எந்தத் துறையாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் அவை சீர்கெட்டுப் போய்த்தான் உள்ளன. எனவே இந்த ஆட்சியை ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

 

அந்த உணர்வை நீங்கள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில் உங்கள் கருத்துகளை நீங்கள் இங்கே பேசிவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசி, மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

 

மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நிறைவு செய்துபின் அவர், “இங்கு பேசிய அனைவரும் சிறப்பாகப் பேசியிருக்கிறீர்கள். சுருக்கமாகப் பேசியிருக்கிறீர்கள். நீங்கள் உங்களது தனிப்பட்ட பிரச்சினையை மட்டும் பேசாமல் உங்கள் ஊர்ப் பிரச்சனையை, பொதுப் பிரச்சினைகளைப் பேசியிருக்கிறீர்கள்.

 

வேலைவாய்ப்புப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினீர்கள். விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய கொடுமைகளைப் பற்றிப் பேசினீர்கள். ஆசிரியர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். தொழில்துறையைப் பற்றிக் கூடப் பேசினீர்கள்.

 

2015-ஆம் ஆண்டு மறைந்துபோன அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அப்பொழுது கிட்டத்தட்ட 2 கோடியே 34 லட்சம் ரூபாய் முதலீடு கொண்டு வருவோம் என்று அறிவித்தார்கள்.

 

அதற்குப் பிறகு இப்போது எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். முதலமைச்சர், தொழில்துறை அமைச்சர் இன்னும் சிலர் அரசாங்கப் பணத்தில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றார்கள்.

 

போகட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. தொழிலில் முன்னேற்றம் கொண்டு வரப் போகிறோம். முதலீடு கொண்டு வரப் போகிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றார்கள். அவர்கள் சென்று வந்த பின், சொன்னது இதுவரைக்கும் ஏதாவது நடந்திருக்கிறதா? தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள். லட்சக்கணக்கில் முதலீடு வந்துவிட்டது. லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து விட்டோம் என்று தவறான ஒரு தகவலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் யாருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை.

 

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், அவர்கள் பிறப்பித்த முதலீடு எவ்வளவு என்று சொன்னார்கள் என்றால் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி என்று அறிவித்தார்கள். ஆனால் 10 ஆண்டுகளில் பெறப்பட்டது அது அல்ல. உண்மை என்னவென்று கேட்டீர்கள் என்றால், வெறும் 9.4% தான். வெறும் 16,188 கோடிதான். ஆண்டுக்கு 1800 கோடிதான் பெறப்பட்டதாக நான் சொல்லவில்லை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்ற பிரபலமான ஆங்கிலப் பத்திரிகை ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

முதலீடு பெற்றுவிட்டோம், வேலை வாய்ப்பைத் தந்து விட்டோம் என்று அவர்களே சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அது உண்மை அல்ல. அதுமட்டுமில்லாமல் ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ள ஒரு சர்வேயில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது என்று ஒரு தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல. முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு 19வது இடத்தில் இருக்கிறது. அதனை மூடி மறைத்துவிட்டு ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

 

இளைஞர்கள் இந்த ஆட்சியின் மேல் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். படித்துவிட்டு வேலைக்கு போகலாம் என்று காத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விவசாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் நேற்று தொலைக்காட்சி பார்த்திருப்பீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு உருக்கமான செய்தி, நெஞ்சை நெகிழ வைக்கக்கூடிய செய்தி ஒன்றை ஒளிபரப்பினார்கள்.

 

தூத்துக்குடியில் ஒரு விவசாயி இருக்கிறார். அவருடைய பெயர் நாராயணசாமி. அவர் தன்னுடைய கடனைக் கட்ட முடியாமல், விவசாயம் செய்ய முடியாமல், தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் தூக்குப் போட்டு இறந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்னால் அவரது ஆசைப் பேத்தி பெயர் மித்ராவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

 

அந்தக் கடிதத்தை அவர் விவசாயம் செய்துகொண்டிருக்கும் மண்ணில் எழுதுகிறார். அந்த மண்ணில் ‘மன்னித்துவிடு மித்ரா’ என்று எழுதி வைத்துவிட்டு அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். இந்தச் செய்தியை அந்தத் தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். அதைப் பார்த்து உறைந்து போய்விட்டேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இந்த நிலையில்தான் இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிறது. நமக்குத் தெரிந்து இது, தெரியாமல் எத்தனையோ தற்கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

 

டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எதற்காக இந்தப் போராட்டம் நடக்கிறது என்றால், மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைப் போட்டுள்ளது. அது என்னவென்றால் இனிமேல் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது, அப்படிச் செய்தாலும் அவர்கள் நினைத்த விலைக்கு விற்க முடியாது, உழவர் சந்தை இனிமேல் இருக்காது. அது தனியாரிடம் கார்ப்பரேட் கம்பெனிக்குச் செல்கிறது, அதானி குரூப்பிற்குச் செல்கிறது.

 

இப்படி ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்து, நாம் உழைத்து, நாம் செய்கிற விவசாயத்தில் நாம் பலன் பெற முடியாது. கார்ப்பரேட்தான் பலன் பெறக் கூடிய நிலைமை என்று வந்துவிட்டது.

 

இந்த 3 வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் எல்லாம் ஒன்றுதிரண்டு கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பெண்களும், ஆண்களும் அங்கேயே குடிசை அமைத்துக்கொண்டு, அங்கேயே சமைத்து, அங்கேயே சாப்பிட்டு, சாலையிலேயே படுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இதுவரைக்கும் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியவில்லை. அருகில் இருக்கும் பாண்டிச்சேரி, அருகில் இருக்கும் கேரளா, டெல்லி, பஞ்சாப் என்று எல்லா மாநில முதலமைச்சர்களும் இந்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

 

ஆனால் இங்கு இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வாறு தீர்மானம் போடவில்லை. அதை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக அதனை ஆதரிக்கிறார். இதுதான் கொடுமை. இந்த லட்சணத்தில் அவர் தன்னை ஒரு விவசாயி, விவசாயி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

 

இவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்துகொண்டு, சிறப்பான கருத்துகளைச் சொன்னீர்கள். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்தக் கோரிக்கைகளைச் சொல்லி இருக்கிறீர்கள். நீங்களே சொன்னீர்கள், ‘உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் தான் வரப்போகிறீர்கள்’ என்று சொன்னீர்கள்.

 

‘பொருத்தது போதும் பொங்கி எழுவோம்’ என்பது போல இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளது. நிச்சயமாக உங்களது கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் வழங்கி, உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்” என்று தனது உரையை முடித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.