Skip to main content

“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

MK Stalin condemn Narendra Modi

 

பயிர்களுக்கான உர விலை உயர்ந்துள்ளது. அதன்படி 50 கிலோ கொண்ட டி.ஏ.பி. உரம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1200-க்கு விற்பனையானது. தற்போது 700 ரூபாய் உயர்ந்து ரூ. 1900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 1,160-க்கு விற்ற ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம் தற்போது ரூ.615 உயர்ந்து, ரூ.1775-க்கு விற்பனையாகி வருகிறது. 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ. 950-இல் இருந்து ரூ.400 உயர்ந்து,  ரூ.1,350 -க்கு விற்பனையாகி வருகிறது.

 

இதனைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உர விலை உயர்வின் மூலம் - 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாகச் செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அராஜகமாகக் கலைத்திருப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய பாஜக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக் கூட மனமில்லாத - மார்க்கம் தெரியாத - மனிதாபிமானமற்ற மத்திய பாஜக அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உர விலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து, என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து - இன்றைக்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக, தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பழிவாங்குவது நியாயமல்ல! 

 

உர விலையைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதன் பிறகு ‘உர விலை உயர்வு இப்போதைக்கு கிடையாது’ என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பாஜக அரசு தரப்பிலிருந்து  வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு! ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டு - பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு! இப்போது உர விலையை உயர்த்திவிட்டு – ‘இப்போது அமல்படுத்தமாட்டோம்’ என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது.

 

பொதுத்துறை நிறுவனங்களை - புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால்  இந்த பாஜக அரசுக்கு இருக்கின்ற நிறுவனங்களைக் கலைப்பதோ, தனியாருக்கு விற்பதோ மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாக இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் தீவிர முயற்சியின் விளைவாக 2003இல் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது. இங்கு சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்தத் தீர்ப்பாயம் - காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது. ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் - தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் இந்தத் தீர்ப்பாயத்தைக் கலைத்துள்ளது மத்திய பாஜக அரசு. இத்தீர்ப்பாயம் மட்டுமல்ல - இன்னும் பிற ஏழு தீர்ப்பாயங்களையும் கலைத்து மூர்க்கத்தனமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

 

உயர் நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்க - மக்களுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பாஜக அரசு கலைத்துக்கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக - சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்தது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. ஒருபுறம் உர விலையை உயர்த்தி விவசாயிகளுக்கும், இன்னொருபுறம் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்து தமிழகத்திற்கும் மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள்.” என்றார் மு.க. ஸ்டாலின்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.