MK Stalin Comment on Governors

‘உங்களில் ஒருவன்’ பகுதிக்காக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “பாஜக அரசின் ஆளுநர்களுக்கு வாய்தான் உண்டு; காதுகள் இல்லை” என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார். முதல்வரின் இந்த பதில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Advertisment

முதல்வரிடம், “ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவி மடுப்பார்களா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார் முதல்வர்.

Advertisment

குறிப்பாக, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் கே.என்.ரவிக்கும் தொடர்ச்சியாக, கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படும் சில முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்பதலளிக்காமல் கிடப்பில் வைத்து விடுகிறார் ஆளுநர் ரவி. இதனாலேயே இரு தரப்புக்கும் மோதலும் சர்ச்சைகளும் வெடித்தபடி இருக்கின்றன. ஆளுநர் ரவி தனது பொறுப்பை மறந்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டும் எதிரொலித்தபடி இருந்து வருகிறது.

MK Stalin Comment on Governors

இந்த நிலையில் தான், ஆன்-லைன் ரம்மி விளையாட்டைதடை செய்து நிறைவேற்றிய சட்ட மசோதா மீது உடனடி முடிவெடுக்காமல், 163 நாட்கள் கிடப்பில் போட்டுவைத்து விட்டு, தற்போது அதனை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார். இது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஆளுநரின் இத்தகைய செயலை கண்டித்து வருகின்றன.

ஆன்-லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீது தனக்கிருக்கும் சந்தேகங்களை கேள்விகளாகக் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினார் ரவி. அதற்கு உடனடியாக பதிலளித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆன்-லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்ட மசோதாவைப் போலவே, இன்னும் சில மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமலும் அதன் மீது முடிவெடுக்காமலும் காலதாமதம் செய்தபடி இருந்து வருகிறார் ஆளுநர் ரவி.

இத்தகைய பின்னணிகள் இருக்கும் சூழலில்தான், ஆளுநரைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆளுநர்களுக்கு வாய்தான் உண்டு; காதுகள் இல்லை” என்று தாக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.