Advertisment

“குண்டர் சட்டம் ரத்தானதற்கு அ.தி.மு.க. அரசு, இவ்வாறு துணை போயிருப்பது வருத்தமளிக்கிறது” - மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

mk stalin

அதில், “அ.தி.மு.க. அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியிருக்கிறது.

இளம்பெண்களின் வாழ்வினை, இரக்கமனம் சிறிதுமின்றிச் சூறையாடிய இந்த இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும்போது, சாதாரணமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளைக் கூட அ.தி.மு.க. அரசின் மறைமுகக் கட்டளைப்படி, காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்காமல் கைவிட்டிருப்பது வேதனை தருகிறது.

Advertisment

"ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்ற அடிப்படை சட்ட நடைமுறையைக் கூட, வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை, யாருக்கோ உதவிடும் நோக்கில், கோட்டை விட்டுள்ளது.

“குண்டர் சட்டத்தில் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று ஏற்கனவே உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புகளை எல்லாம் முற்றிலும் புறக்கணித்து - இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளிகளை எப்படியாவது தப்ப விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்தானதற்கு அ.தி.மு.க. அரசு, இவ்வாறு துணை போயிருப்பது வருத்தமளிக்கிறது; இது மிகவும் வெட்கக்கேடானது.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு, முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெறுகின்ற நேரத்தில், காவல்துறையும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் காட்டியுள்ள அலட்சியமும் ஆர்வமின்மையும்; இந்த வழக்கு விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறியிருக்கிறது.

இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர முடியும். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களையும், மற்ற ஆதாரங்களையும், சகலவிதமான வழிமுறைகளையும் கையாண்டு, கலைக்க முடியும்.

பழமொழியைப் போல தமிழக மக்களிடையே பழக்கப்பட்டுப் போன, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இது போன்ற சூழலை ஏன் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது? யாரைக் காப்பாற்ற இந்த முயற்சிகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன; அந்தக் கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் விடையும் பொதுமக்களுக்குப் புரிகிறது.

குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும், அவர்களுக்குத் திரைமறைவில் வாய்மொழி உத்தரவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு உடனடியாக இந்த நடவடிக்கையினை எடுக்காவிட்டால், அரசு மீது ஏற்கனவே ஏற்பட்டுள்ள சந்தேகம் வலுப்பெற்று விடும் என்பதை அ.தி.மு.க. அரசு உணர வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, முறைப்படியும் சட்டப்படியும், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்திற்கு ஆட்படாமலும் நடத்தப்பட்டு, இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த, கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்

pollachi mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe