Skip to main content

"பொதுக்குழுவே வருக என போஸ்டர் அடித்ததற்கு நீக்கமா?; ஸ்டாலின் முதல்வரே ஆக முடியாது"!-மு.க.அழகிரி பேச்சு...  

Published on 03/01/2021 | Edited on 04/01/2021
 MK Alagiri speech!

 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இன்று (03/01/2021) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல்படி இந்த கூட்டம். எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை தி.மு.கவின் கோட்டையாக மாற்றியது நான். இப்போதும் நான் உங்களில் ஒருவன். மதுரை நமது கோட்டை. இதை யாராலும் மாற்ற முடியாது. பேராசிரியர் அன்பழகனுக்கு தெரியாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கினர். திமுகவில் இருந்து வைகோ வெளியேறியபோது ஒருவர்கூட கட்சியைவிட்டு வெளியேற வில்லை. கலைஞரிடம் இல்லாததைச் சொல்லி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். உங்களுக்கெல்லாம் தெரியும் திருமங்கலம் தேர்தல். திருமங்கலம் என்றால் இந்தியாவே பயப்படுகிறது. திருமங்கலத்தில் நீங்கள் நினைப்பது போன்றும், மற்றவர்கள் நினைப்பது போன்றும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. திருமங்கலம் எலக்ஷனில் நான் கோபித்துக் கொண்டு வெளியே இருந்தேன். அப்பொழுது கலைஞர், மைத்துனர், என்னுடைய தங்கை, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், இப்போது திமுகவின் தலைவராக இருக்கிற ஸ்டாலின் என எல்லோரும் வந்து என்னிடம் வந்து மன்றாடி நீங்கள்தான் திருமங்கலத்தில் வேலை செய்ய வேண்டும், பணிபுரிய வேண்டும் இது கலைஞர் விருப்பம் என்று சொன்னார்கள். நான் ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் என்னை அவமானப்படுத்தினீர்கள் நான் வேலை செய்ய மாட்டேன் எப்படியாவது போங்கள் என சொன்னேன்.

 

கலைஞர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்து ஐ.பெரியசாமியை விசாரிக்கிறார். மு.கஅழகிரி ஒத்துக் கொண்டாரா இல்லையா? என. அதன்பிறகு மன்றாடி மன்றாடி பிறகுதான் ஒத்துக்கொண்டேன். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்கிறேன். நிச்சயமாக வெற்றி பெறுவதற்கு உறுதுணையுடன் என்னுடைய ஆதரவாளர்கள் நிற்பார்கள் என்று அவர்களிடத்தில் சொன்னேன். அதேபோல் திருமங்கலம் தேர்தல் வந்தது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தேன். நிருபர்கள் அப்பொழுது பேட்டி எடுத்தார்கள். வெற்றிபெற்று விடுவீர்களா எனக்கேட்டார்கள். நான், 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். அதே 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அப்பொழுது வெற்றி பெற்றோம். ஆனால் பல மீடியாக்கள், பல பத்திரிகைக்காரர்கள் சொன்னார்கள் திருமங்கலம் ஃபார்முலா செய்து வெற்றிபெற்றார் என்று. 

 

 

என்ன ஃபார்முலா செய்தேன். 1000 ரூபாய் கொடுத்தார், 2000 ரூபாய் கொடுத்தார் என்றார்கள். நாங்கள் யாருக்குமே கொடுக்கவில்லை. எங்களுடைய உழைப்பு தான் அந்த வெற்றிக்கு காரணம். 1962 தேர்தலில், கலைஞர் தஞ்சாவூர் தேர்தலில் பெரிய பண முதலை பரிசுத்தநாடார் என்பவரை எதிர்த்து போட்டியிட்டார். அப்பொழுது நான் சின்ன பையன். நான் அப்போதே கட்சிக்காக வேலை பார்த்தேன். கலைஞர் எப்படி கையாள்கிறார் எனத் தெரிந்துகொண்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கு எழுந்து பூத்துக்கு செல்வார். அந்தப் பணியைத் தான் நாங்கள் திருமங்கலத்தில் செய்து, கட்சிக்காரர்களை ஊக்குவித்து வெற்றி பெற்றோம். ஃபார்முலா என்றால் கலைஞரின் உழைப்புதான் ஃபார்முலா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

 

அப்படித்தான் திருமங்கலத்தில் நான் வெற்றிபெற்ற பிறகு என்னை சென்னைக்கு அழைத்தார்கள். சென்னைக்கு அழைத்து பாராட்டு தெரிவிப்பதுபோல் ஏர்போர்ட்டில் எனக்கு வரவேற்புக் கொடுக்க எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா? சுமார் 10 பேர். எனக்கு எவ்வளவு தேர்தல் டென்ஷன் இருந்திருக்கும். திருமங்கலத்தில் ஜெயிக்கவில்லை என்றால் காங்கிரஸ் நம்மை விட்டுச் சென்றிருக்கும், அதோடு ஆட்சியே நம் கைவிட்டு போயிருக்கும் அதை மறந்து விட்டார்கள். வெறும் பத்து பேரை என்னை வரவேற்பதற்கு விமான நிலையத்திற்கு அனுப்பினார்கள். நான் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. கலைஞருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்பது தான் என்னுடைய மனதில் அப்போது இருந்தது.

 

mk alagiri press meet at madurai

 

உடனே கலைஞர் என்னை அழைத்து பொதுச் செயலாளரும், நானும் உனக்கு ஆணையிடுகிறோம் என்றார். 'என்னப்பா' என்று கேட்டேன். நீ தான் இனிமேல் தென் மண்டலத்தினுடைய அமைப்புச் செயலாளர் என்றார்கள். நான் உங்களுக்கு தொண்டனாக இருக்கத்தான் விரும்புகிறேன் தவிர, பதவியை எதிர்பார்த்து திமுகவில் நான் என்றைக்குமே இருந்ததில்லை. உங்களுக்கு தெரியாதா நான் பதவி வேண்டும் என நினைத்திருந்தால் எந்தப் பதவியும் உங்களிடம் கேட்டு வாங்கி இருக்கலாமே. இந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை என்னைப்போல் உழைப்பவர்கள் வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொன்னேன். அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இது எங்களுடைய கட்டளை என்று சொன்னார். அதன் பிறகு எப்படி மீற முடியும், சரி என்று ஏற்றுக் கொண்டேன். விமான நிலையத்தில் 10 மாவட்ட செயலாளர்கள், தென்மண்டல அமைப்புச் செயலாளர்கள் வரவேற்பு கொடுத்தார்கள். எல்லாம் நடித்தார்கள். இவர் வேகமாக வளர்ந்து வருகிறார் இவரை எப்படியாவது அமுக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை போட்டார்கள். 2009 திருச்செந்தூர் எலக்சன் வந்தது, அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். நானும் அவரோடு தான் வந்தேன். அப்போது நான் சொன்னேன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்றேன். அதேபோல 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது நான்  திமுகவிற்கு செய்த துரோகமா? எண்ணிப்பாருங்கள்.

 

நாடாளுமன்ற தேர்தல் வந்தது 2009-ல் நான் போட்டியிட்டேன். என்னை வெற்றிபெற செய்தீர்கள் உங்களால் நான் அமைச்சரானேன். முதலில் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று சொன்னேன். கட்சியில் வலுக்கட்டாயமாக அமைச்சர் பதவி வழங்கினார்கள். 2009-ல் வெற்றி பெற்ற 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை வெற்றிபெற செய்தோம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஒரே ஒரு தொகுதி தென்காசியை மட்டும் காங்கிரஸ் அன்று வெற்றிவாய்ப்பை இழந்தது. அதில் என்ன வேடிக்கை என்றால் முதல் முதலில் உதயசூரியன் சின்னத்தில் ஜெயிச்சது மதுரையில் நான்தான். அதுமட்டுமல்ல, என்னுடைய சுற்றுப்பயணத்தின் பொழுது நாகர்கோவிலுக்கு சென்றேன். நாகர்கோவிலில் கூட்டத்திலே பல பேர் பல கேள்விகள் எழுப்பினர். எங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தை தொகுதிக்கு வாங்கிக் கொடுங்கள். இதுவரைக்கும் உதயசூரியன் இங்கு நின்றதே கிடையாது என்று சொன்னார்கள். நான் அப்பொழுதே அவர்களுக்கு சபதம் செய்து கொடுத்தேன். நிச்சயமாக உதயசூரியன் நாகர்கோவிலில் நிற்கும், வெற்றிபெறும் என உறுதி கொடுத்தேன்.

 

கலைஞர், என்ன இப்படி சொல்லிவிட்டு வந்துவிட்டாய் காங்கிரசிடம் எப்படி கேட்பது என்று கேட்டார். நீங்கள் கேட்க வேண்டாம் நான் காங்கிரஸிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொள்கிறேன் எனச் சொல்லி திருநெல்வேலியை அவர்களிடம் கொடுத்துவிட்டு நாகர்கோவிலை நாம வாங்கினோம். இரண்டு இடத்தில் வெற்றி பெற்றோம். இது எல்லாம் கட்சிக்கு செய்த துரோகமா? இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; நேரம் போதாது.

 

 

திருமங்கலம் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது மதிய உணவிற்காக எனது தம்பி ஸ்டாலின், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி போன்றவர்கள் எல்லாம் மதிய விருந்துக்கு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். இவர்கள் முன்கூட்டியே பேசி வந்திருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. வந்து என்னிடத்திலே நீங்கள் எப்படியாவது கலைஞரிடத்தில் சொல்லி ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வாங்கித் தரவேண்டும் என்று சொன்னார்கள். இது என்ன பெரிய விஷயம். இதை நான் எனக்காகவா கேட்கப் போகிறேன் ஸ்டாலினுக்குதானே கேட்கப் போகிறேன். நான் ஏதாவது பதவிக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா எனச் சொல்லி தொலைபேசியை எடுத்தேன். கலைஞர் 'என்னடா' எனக்கேட்டார். ஒன்னும் இல்லப்பா ஸ்டாலினுக்கு நீங்கள் பொருளாளராக பதவிக்கு கொடுங்கள் என்றேன். அன்று மாலையே பத்திரிகையில் 'பொருளாளர் ஸ்டாலின்' என வந்தது. 

 

ஏன் தெரியுமா நான் தென் மண்டல செயலாளர் ஆகிவிட்டேன் அந்த பொறாமை, அதனால் அவர் பொருளாளராக வேண்டும். எனக்கு ஈக்குவலாக இருக்க வேண்டுமாம். நான் எப்பொழுதும் அப்படி நினைக்கவே இல்லை. அதுமட்டுமல்ல இன்னொரு முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறேன். எனக்கு பொய் சொல்லி பழக்கம் இல்லை. பொய் சொல்லத் தெரியாது எனக்கு. திருமங்கலம் தேர்தல் நேரத்தில் இரவு என் வீட்டிற்கு தம்பி ஸ்டாலின், அவரது மனைவி, இன்னும் இரண்டு பேர் விருந்துக்கு வந்தார்கள். நானும், என் மனைவியும் சொன்னோம் ''ஸ்டாலின், கலைஞருக்குப் பிறகு நீதான் எல்லாம். உனக்காக எப்பொழுதும் பாடுபடுவேன்'' என அந்த வார்த்தையை சொன்னேன். அவரது மனசாட்சிக்கு தெரியும். இதை நான் அண்ணா மீதும், கலைஞர் மீதும் ஆணையிட்டு சொல்கிறேன். இந்த வார்த்தையை சொன்னேனா இல்லையா என்பதை அவர் மறுக்க முடியுமா?

 

இப்படியே சொன்னேன் 'நீ தான் எல்லாம், அடுத்த தலைவர் நீதான், அடுத்த முதலமைச்சர் நீதான், எனக்கு எந்த பதவியும் தேவையில்லை' என்றேன். ஆனால் அவர் ஏன் இப்படி துரோகம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கே தெரியாமல் சிலபேரை நீக்குவார். எனக்கே தெரியாமல் சேர்ப்பார்கள் இப்படியெல்லாம் செய்தார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. பிறகு நான் அமைச்சராகி விட்டேன் என்ற கடுப்பு அவர்களுக்கு. நான் அமைச்சர் ஆனவுடன் அந்த அந்தஸ்துக்கு அவர் வரவேண்டும் என நினைத்தார். அமைச்சரான அடுத்த நாள் பெரியார் சிலைக்கும், அண்ணா சமாதிக்கும் மலர் வளையம் வைத்து விட்டு வாருங்கள் என கலைஞர் என்னிடம் சொன்னார். அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற அண்ணா சிலைக்கு முதலில் மாலை போட்டேன். அப்பொழுது, உங்களை கலைஞர் அழைக்கிறார் தனியாக பேசவேண்டுமாம் என்ற செய்தி வந்தது. இவ்வளவு பேர் இருக்கும்போது என்னிடம் மட்டும் தனியாக என்ன பேச நினைக்கிறார் என உள்ளே சென்றேன். என்ன விஷயம் என்று கேட்டேன். ஒன்றும் இல்லை, உன் தம்பி துணை முதல்வர் பதவி கேட்கிறார் கொடுக்கலாமா என்றார். நான் தாராளமா கொடுங்க. இது உங்கள் கட்சி, நீங்கள் உருவாக்கிய அறிவாலயத்தில்தான் நாங்களே நின்று கொண்டிருக்கிறோம். இதை என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லையே. உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்றேன்.

 

என்னை எதற்கு கட்சியில் இருந்து நீக்கினார்கள்? நான் என்ன தப்பு செய்தேன்? எந்த தப்பும் செய்யவில்லையே. 'பொதுக்குழுவே வருக' என போஸ்டர் அடித்ததற்கு நீக்கமா? உங்களுக்கு போஸ்டர் அடிக்கவில்லையா? 'வருங்கால முதல்வரே' என உங்களுக்கு போஸ்டர் அடிக்கிறார்கள். நீங்கள் முதல்வராக முடியாது. அதற்காக நான் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஸ்டாலின் அவர்களே முதல்வராக நீங்கள் வரவே முடியாது. என்னுடைய ஆட்கள், என்னுடைய ஆதரவாளர்கள் உங்களை நிச்சயமாக விடமாட்டார்கள்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.