Skip to main content

தமிழிசை, பொன்னாருக்கு அமைச்சர் பதவி... காங்கிரஸ் தலைவர் விருப்பம்

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 

அ.தி.மு.க.வை புறக்கணித்திருந்தாலும், பா.ஜ.க.வை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரில் எவருக்காவது வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அ.தி.மு.க. தேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியோடு 57 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். போதிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட காரணத்தால் ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் சேரவில்லை. பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இதன் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன.


  tamilisai soundararajan pon radhakrishnan



மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அ.தி.மு.க.விலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. இதன்மூலம் அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்றிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. இதனால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. 

 

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வை புறக்கணித்திருந்தாலும், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரில் எவருக்காவது வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக திரு. வி. முரளிதரன் அவர்களுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்போல தமிழகத்திற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். 


 

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான் என்பதை கூற விரும்புகிறேன்.

 

KS-Alagiri


 

இச்சூழலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற 37 மக்களவை உறுப்பினர்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். காவிரி நீர், மேகதாது அணை, பாலாறு, நீட் தேர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளில்  தமிழகத்தின் உரிமைகளை மறுக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தி.மு.க.- காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.