ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு..! 

06:23 PM May 22, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், "கரோனா தொற்று பரவலை குறைக்கும் நோக்கில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஆய்வு பணிகள் நடைபெற்றது. சென்னிமலையில் 1010 நெசவாளர் காலனியில் நோய் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது எனவே அந்த பகுதியில் புதிதாக கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் 3,000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,000 படுக்கைகளும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் வசதி தேவைப்படாத சிகிச்சைக்கும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பில்லாதவர்களுக்கு என 3000 படுக்கை வசதிகள் தயார் செய்துள்ளோம். அதில் 950 பேர் மட்டுமே தங்கியுள்ளார்கள். அங்கு அனைத்து உணவு உட்பட அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் மிக விரைவில் சரி செய்யப்படும். மாவட்டத்தில் சித்த மருத்துவமனை அமைப்பதற்கு ஒருவர் அனுமதி கேட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" என்றார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. அமைச்சர்கள் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சைகள் என தொடர்ந்து இடைவிடாமல் பணியாற்றி வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT