Minister warns Karnataka Congress that 'Tamil Nadu will resist at all levels

Advertisment

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருந்தார். இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவக்குமார் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.

Advertisment

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.