Minister Udayanidhi's inspection at the DMK Youth Conference

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இதன் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது.

திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநாட்டு ஏற்பாடுகளைத் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதே சமயம் திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.