Minister Udayanidhi Stalin says Jayalalitha should be praised

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதிவாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

Advertisment

அந்த வகையில், இன்று (17-02-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “புதிய கல்வி கொள்கை மூலம் 5,8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பா.ஜ.க செய்கிறது. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.

நீட் விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட் தேர்வு விலக்கு ஏற்படுமோஅதுதான் முதல் வெற்றி” என்று கூறினார்.