Advertisment

“அவதூறு பரப்பி கோட்டைக்குள் செல்ல வேண்டும் என்ற வெறி பா.ஜ.க.விடம் இருக்கிறது” - உதயநிதி ஸ்டாலின்

Minister Udayanidhi Stalin criticized Bjp

'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளை கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைசர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பது தான் பா.ஜ.க.வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி-மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. 'யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்' என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது. தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.

பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரெல்லாம் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து, தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் முதல்வர் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார். ஆனால், 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக் கொண்டு, அரசியல் என்ற பெயரில்மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள்தான். இந்த நாடகத்தில், 'தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்', 'நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்', 'ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்', மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்' என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையைக் கழுவிவிடப் பா.ஜ.க. நினைக்கிறது. 'பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே' என்று எடப்பாடியும் கைகளைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்.

Advertisment

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குகள் போன்ற முக்கியமான பல வழக்குகளைச் சி.பி.ஐ கிடப்பில் போட்டிருப்பது போன்றவை எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன. 'கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்', தூண்டிவிடப்பட்ட ‘மணிப்பூர் கலவரம்', 'சி.ஏ.ஜி.' வெளியிட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என ஏற்கெனவே இரத்தக் கறையும் ஊழல் கறையும் படிந்தவர்களால், எடப்பாடி மீதுள்ள அதே கறைகளை எப்படிக் கழுவிவிட முடியும்?

பாசிச பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருந்து மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்தற்கான தண்டனையை, மக்கள் எடப்பாடி அண்ட் கோ-வுக்கு வழங்குவார்கள் என்பது நிச்சயம். எடப்பாடியின் தொடர் தோல்வியும் அதைத்தான் உணர்த்துகின்றன.மக்கள் விரோத அடிமை அ.தி.மு.க. பாசிச பா.ஜ.க. குறித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இப்படிப் பேசும்போது அவர்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்குவதை உணரமுடிகிறது.

'முடியவே முடியாது' என்றார்கள். ஆனால், கலைஞர் பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸைக் கட்ட அவர்களுக்கு மனமில்லை. ஆனால், கலைஞர் பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகத்தையும், சென்னையில் மருத்துவமனையையும் நம் முதலமைச்சர் கட்டியெழுப்பித் திறந்து வைத்துள்ளார் என்பதைக் குறிப்பிடும்போது மக்கள் நல அரசுக்கும் - மக்கள் விரோத கும்பலுக்குமான வித்தியாசத்தை இளைஞர்கள் நன்றாகப் புரிந்துகொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe