minister thangam thennarasu talks about erode by election 

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈரோடு திமுக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பச்சை பொய்களைக் கூறி உள்ளார். தோல்வி பயத்தில் மக்களின் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 10 ஆண்டுகள்அதிமுக ஆட்சியில் ஒரு பகுதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டுக்கு ஏதும் செய்யவில்லை. அவர் சொன்ன பொய்கள் எல்லாம் கேலிக்கூத்தானவை.

எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சியில் செய்யாத திட்டங்கள், கட்சிக்கு செய்த துரோகங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. பாஜகவின் பேச்சை கேட்டு தமிழகத்திற்கு கெடுதல் செய்துள்ளார். நீட் விவகாரம், உதய் மின் திட்டத்தால் பாதிப்பு, மேகதாது அணை பிரச்சனையில் இணக்கமாகச் சென்றது, விவசாயிகளுக்கு பல்வேறு துரோகம் செய்தது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஊழலைப் பற்றி பேச அதிமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. அவர்களது ஆட்சியில் செய்த பல்வேறு ஊழல்களால் தான் மக்கள் அவர்களைத்தூக்கி எறிந்தனர். எடப்பாடி பழனிசாமி குட்கா பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பலர் சுட்டு கொல்லப்பட்டது, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைத்தது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும். ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் அதிமுக எத்தனை முகமூடிகள் போட்டாலும், இந்தத்தேர்தலோடு அதிமுக தூக்கி எறியப்படும். பல இடைத்தேர்தல்களில் அவர்கள் எல்லாம் செய்ததை நாங்கள் செய்ததாகச் சொல்கிறார்கள். திமுக அரசின் அமைச்சர்கள் ஈரோட்டில் கிடாவிருந்து நடத்துகிறார்கள் என்று சொல்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் தயிர் சாதம் தான் தற்போது சாப்பிட்டு வந்தேன்.

Advertisment

ஈரோட்டில் பல திட்டங்களுக்கு முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளோம். படிப்படியாக வேலைகளைச் செய்வோம். ஈரோடு வருங்காலத்தில் சீர்மிகு நகரமாக இருக்கும். அவர்கள் செய்த திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஈரோடு திண்டலில் எடப்பாடி பழனிச்சாமி தண்டால் எடுத்துக் கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிதிப்பற்றாக்குறை 2177 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.வருவாய் பற்றாக்குறை 1472 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த ஆட்சியை விட நிதி நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். அதேபோல் கூட்டணி தர்மத்தை மதித்து அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றி வருகிறோம். அதிமுகவை போல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியைப்பறித்துக் கொண்டு நாங்கள் நிற்கிறோம் என்ற உணர்வில் நாங்கள் இல்லை" எனப் பேசினார்.

மேலும், "திமுகவுக்கு எந்த காலத்திலும் தோல்வி பயம் இல்லை.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு இடத்தில் பெகாசஸ் என்கிற முறையில் இரட்டை இலை சின்னத்தை, கிரேக்க தொண்மையின் அடையாளமானகுதிரைகள்எனக் கூறி நினைவு சின்னம் அமைத்தார்களே, அது அவர்களது கட்சியின் நிதியிலா வைக்கப்பட்டது" என பேனா நினைவுச் சின்னம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கு தங்கம் தென்னரசு பதிலளித்தார்.