Minister Thangam Thennarasu accuses Edappadi of medical waste issue

கேரள இருந்து மருத்துவ கழிவுகளைத் தமிழ எல்லையில் கொட்டுவதற்குத் தமிழக அரசியல் கட்சியினர் பொதுமக்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘வளமிகு தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசையும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் மருத்துவக்கழிவுகள் விவகாரம் குறித்து தமிழக அரசின் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் தான், கோவை, தேனி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதிகளில், கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாகி கிடந்தது. 2016 ஆம் ஆண்டு ‘மருத்துவக் கழிவுகள் அபாயம்: இன்னும் விழித்துக்கொள்ளாத தமிழகம்!’ என்று பத்திரிகையில் செய்திகள் வந்தன. 2019 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் கிராமத்தில் கேரளாவில் இருந்து குப்பைகளை கொண்டுவந்து லாரி லாரியாக கொட்டிய லாரிகளை மக்களே சிறைபிடித்த நிகழ்வு என பல்வேறு உதாரணங்களை எடுத்துக்கூற முடியும்.

முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடனே தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கபட்டு வருகிறது. கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாரா விதமாக நடக்கும் ஓரிரு நிகழ்வுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர்பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டப்படுகிறது என புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கழிவுகளை கொட்டிய சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று தாக்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.