Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும்: கே.எஸ். அழகிரி

indiraprojects-large indiraprojects-mobile

 

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழகத்தில் சமீபகாலமாக மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சால்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கிற வகையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. ‘செங்குன்றம் ஏரியில் தண்ணீர் குறைவது முன்பே தெரியாதா ? தமிழக அரசிடம் நீர் மேலாண்மை திட்டமே இல்லை, தமிழகத்தில் எந்த நீர்நிலைகளிலும் தூர் வாரப்படவில்லை” என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி இருக்குமேயானால் உடனடியாக பதவியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியே இல்லை. 

 

S. P. Velumani
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாள்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து புதிய வியாக்யானங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ.15 ஆயிரத்து 838 கோடி செலவில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரில் ரூ.2638 கோடியும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.5346 கோடியும், சென்னை தவிர்த்து பிற மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ.4440 கோடியும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வளவு தொகை செலவழித்த பிறகும் ஒரு சொட்டு தண்ணீர் கூட புதிதாக இவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றுச் சொன்னால் செலவழிக்கப்பட்ட தொகை என்ன ஆனது ? நீர் ஆதாரங்களை பெருக்குவதற்காக திட்டப் பணிகளுக்கு நிதி செலவழிக்கப்பட்டதா ? அப்படி நிதி செலவழிக்கப்பட்டிருந்தால் நீர் ஆதாரங்கள் ஏன் பெருகவில்லை ?


 

கடந்த 2015 இல் பெருவெள்ளம், 2016 இல் வறட்சி, 2017 இல் ஓரளவு மழை, 2018 ஏப்ரலில் தொடங்கிய வறட்சி, தற்போது 2019 இல் கடுமையாகி, அனைவரையும் பாதித்து வருகிறது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர் ஆதாரங்களை தவிர புதிதாக கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. குடிநீர் ஏரிகள் மேம்பாட்டில் அக்கறை செலுத்தப்படவில்லை. இதனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் பெரும் விபத்தில் சிக்கி திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரில் வாழ்ந்து கொண்டிருக்கிற 75 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வாய்ப்பே இல்லாமல் தெருக்களில் காலி குடங்களுடன், குறிப்பாக பெண்கள் கடும் வெயிலில் அலைய வேண்டிய துர்பாக்கிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.


குடிநீர் பஞ்சம் என்பது சென்னை மாநகர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களைத் தவிர, 21 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. தமிழகத்தில் உலக வங்கி மூலம் ஏரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில்  41,127 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் நீர் பயனீட்டாளர்களின் பங்கே இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்புமுறை மேலாண்மை சட்டம் - 2000 ன்படி விவசாயிகளின் பங்கினை ஏரி பாசன திட்டங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலக வங்கியின் நிதியை ஏரி மேம்பாட்டுத் திட்டம் என்ற போர்வையில் ஆளுங்கட்சியினரின் துணையோடு பெயரளவுக்கு தூர் வாரிவிட்டு ஒப்பந்தக்காரர்கள் கொள்ளையடிக்கிற நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏரிகள்சூறையாடப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் தடுக்காத காரணத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. 
 

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சிறுவாணி, ஆழியாறு, பரம்பிக்குளம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை, சாத்தனூர் ஆகிய அணைகள் கட்டப்பட்டு நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எந்த புதிய நீர்ப்பாசன திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. எந்த அளவுக்கு நீர் எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு மழையின் போது நீர் வந்து சேர வேண்டும். அதைச் செய்வது தான் நீர் மேலாண்மை. கனமழை காலங்களில் சுமார் 260 டி.எம்.சி. நீர் கடலில் வீணாகக் கலக்கிறது.  காவிரியில் மட்டும் சுமார் 90 முதல் 100 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வழியின்றி கடலுக்குள் போகிறது.  சென்ற ஆண்டு மழையின் போது மட்டும் சுமார் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்கு சென்றது. இதையெல்லாம் தடுத்து நீரை சேமிப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நிறைவேற்றிய திட்டம் என்ன ? ஒதுக்கிய நிதி எவ்வளவு ? 
 

சென்னை மாநகரைப் பொறுத்தவரை பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிற 600 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகிற 3 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீருக்காக அல்லல்படுகிற நிலை ஏற்பட்டு, பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்கிற நிலை ஏற்பட்டு வருகிறது. ஏறத்தாழ 12 நிறுவனங்கள் 5 ஆயிரம் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் பணியாற்றுகிற பணியாளர்கள் குடிநீருக்காக கடும் அவதியை எதிர்கொள்கிறார்கள். ஆனால், இத்தகைய கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்கு தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. 
 

சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மீஞ்சூர், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைப் போல இன்னும் சில திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் குடிநீர் பிரச்சினையை தீர்த்திருக்க முடியும். மூன்றாவது திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சரின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.


 

மழையின்மையின் காரணமாக ஏற்படுகிற வறட்சியை எதிர்கொள்வது குறித்த நீர் மேலாண்மையை முன்கூட்டியே திட்டமிட்டுத் தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வறட்சி வந்த பிறகு தீர்வுகாண முற்படுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. தமிழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்தவரை அதை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இதற்குப் பொறுப்பேற்று குறைந்தபட்சம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறவில்லையே தவிர, குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சருக்கு பதவி விலகுவதை தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...