Minister Ragupathi condemns governor RN ravi

Advertisment

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (06-10-24) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “போதைப்பொருள் இளைஞர்களை சீரழிப்பதோடு, சமூகத்தையும் சீர்குலைக்கிறது. தற்போது நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான போதைப்பொருள் மற்றும் ரசாயன மருந்துகள் கைப்பற்றப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. நிலம், கடல் மற்றும் விமான நிலையங்கள் வழியாக அதிக அளவு செயற்கை மருந்துகளை மத்திய முகமைகள் தடுத்துள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அரசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பத்தில், இலங்கை மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் போதைப் பொருள்களுக்கு தமிழ்நாடு ஒரு போக்குவரத்துப் புள்ளியாக மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது அப்படி இல்லை. போதைப்பொருள் பயன்படுத்தும் சமூகமாக நமது மாநிலம் மாறிவிட்டது” என்று கூறினார்.

இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “போதைப்பொருளுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா?. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான போதைப் பொருள் வழக்கிற்கு அனுமதி தராமல் இழுத்தடித்தவர் ஆளுநர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க நேர்மையான நடவடிக்கைகளை தமிழக முதல்வரே முன் நின்று தொடர்ந்து எடுத்து வருகிறார்.

வழக்கம் போல் அபாண்ட குற்றச்சாட்டை சுமத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் மாளிகையிலும் வெளியேயும்அரசியல் அவதூறுகளை அள்ளி வீசுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் ஆளுநர். ஆளுநர் மாளிகையை கமலாலயமாக மாற்றி, ஆளுநர் பதவியை மறந்து, அந்த பதவிக்கு இழுக்கு தேடி வருவது வருத்தம் அளிக்கிறது. பா.ஜ.க மேடையில் நிற்பவராக தன்னை மாற்றிக் கொண்டு, ஆளுநர் ரவி பச்சை பொய்களை பேசுவது வெட்கக்கேடானது. கஞ்சா அல்லாத போதைப்பொருளை ஒன்றிய அரசின் அமைப்புகளே கைப்பற்றுகிறது என்று ஆளுநர் கூறியது வடிக்கட்டிய பொய். ஆளுநர் ரவி முழுநேர அரசியல்வாதியாக இருப்பதால், நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று பேசினார்.