Minister Raghupathi  question Where is Edappadi Palaniswami?

மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்துத் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அமித்ஷாவை கண்டித்து திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக எந்த அசைவும் அதிமுகவில் இல்லாததால், எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisment

சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார். ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா? " என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Advertisment