Minister Raghupathi condemns Edappadi palaniswamy

அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (31-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் உண்மை குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறது. யார் அந்த சார்? அந்த கேள்விக்கு இன்னும் காவல்துறையினரிடம் இருந்து பதில் வரவில்லை. ஒரு காவல் ஆணையர் ஒரு தகவலை சொல்கிறார். மறுநாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அதை மறுத்து பேசுகிறார். இப்படிப்பட்ட சந்தேகங்கள் நிலவுகின்ற காரணத்தினால் தான் உண்மை குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்கு அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டேன். ஆனால், இந்த ஆட்சியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில்லை. அண்ணா நகர் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ஏன்?. மடியில் கனம் இருப்பதால் தான் திமுகவிற்கு பயம் இருக்கிறது” என்று பேசினார்.

Advertisment

இந்த நிலையில், இபிஎஸ் தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அருவருப்பு அரசியல் செய்யும் சேடிஸ்ட் மனநிலையையை பழனிசாமி நிறுத்த வேண்டும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு தினமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.

Minister Raghupathi condemns Edappadi palaniswamy

தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஊடகங்களில் செய்தியாக்குவதை ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரை துன்புறுத்தி மகிழ்ச்சிக்கானும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது. இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார். ஊடகத்தில் வந்த செய்தி, ஊடகத்தில் வந்த செய்தி என சொல்லி வதந்திகளை மட்டும் தானே பரப்பி வந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையான நேர்மையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.

Advertisment

அரசிடம் நேர்மையும் உண்மையும் இருக்கும் காரணத்தினால்தான் அதிமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் எங்கள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் வெளிப்படையாக பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. உண்மைகளை தாங்கி கொள்ள முடியாமல் அற்ப அரசியலில் ஈடுபடும் பழனிசாமி ஏதையோ மறைப்பதாக உளறி வருகிறார். இந்த வதந்தி அரசியல் எல்லாம் ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது. தனது அரசியல் இருப்பை காட்டிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழக வழக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நாளும் உளவியல் துன்புறுத்தலை ஏற்படுத்தும் கேவலமான, இழிவான, அருவருப்பு அரசியலை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள் ஆனால் பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை. அந்த விரக்தியில் திரும்ப திரும்ப அதே பொய்களை பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் பழனிசாமி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.