ADVERTISEMENT

“ஓபிஎஸ் வசதியாக மறந்துவிட்டார்” - அமைச்சர் ஆர். காந்தி குற்றச்சாட்டு

05:56 PM Jan 29, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து அதிமுக ஆட்சியில் நடந்ததை ஓபிஎஸ் மறந்தது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் ஆர்.காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பொங்கல் திருநாளை ஒட்டி மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கவில்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வேட்டி சேலை வழங்கப்படுமா என்கிற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமை உணர்வும் அரசுக்கு உள்ளது. எனவே முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலைகளை ரேஷன் கடைகள் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வேட்டி சேலைகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக 488 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1.77 கோடி சேலைகள் 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய பட்டியல் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கோ-ஆஃப்டெக்ஸ் மற்றும் கைத்தறி வளர்ச்சி கழக நிறுவனங்கள் முகமை நிறுவனங்களாக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே கடந்த ஒன்பதாம் தேதி அன்று சென்னை மயிலாப்பூர் சத்யா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். இந்த பணி பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும். அதிமுக ஆட்சியில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல மாதங்கள் கழித்து இலவச வேட்டி சேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு, பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பல மாதங்கள் கழித்து அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் வசதியாக மறந்துவிட்டார். வேட்டி சேலை விநியோக திட்டம் இவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT