Skip to main content

“பெரியார் சிலையைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை” - அமைச்சர் பொன்முடி

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 Minister Ponmudi says Annamalai is nowhere near to talk about Periyar statue

 

அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று முன்தினம் (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.  

 

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம். 

 

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆனதற்கு காரணமே பெரியார் தான். தமிழகத்தில் உள்ள அனைவரும் படித்திருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று உணர்வுகள் வளர்ந்திருக்கிறது என்றால், அது பெரியார் போட்ட விதை தான். அது யாராலும் மறுக்க முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் பற்றுள்ள அனைவருமே பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் இன்றைக்கு பகுத்தறிவு சிந்தனைக்கு காரணமாக இருக்கக்கூடிய பெரியாரின் சிலையை பற்றி பேசுவது அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. 

 

தமிழகத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற எண்ணத்தில் இதையெல்லாம் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜ் போன்றோர்களெல்லாம் தமிழக மக்களுக்கு எந்தளவு பாடுபட்டார்கள் என்று அண்ணாமலைக்கே தெரியும். இவர்களின் அறிவு அடித்தள மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவர்களின் சிலைகளை வைக்கிறார்கள்” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட அன்னியூர் சிவா!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Anniyur Siva receiving the certificate of success

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Anniyur Siva receiving the certificate of success

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி,  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதம் சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதே சமயம் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்துள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி சான்றிதழைப் பெற்ற பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களால் வெற்றி பெற்றிருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

Next Story

“பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும்” - தொல்.திருமாவளவன் எம்.பி.,

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
 thol thirumavalavan speech about VIT Viswanathan

கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்கா, நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் தொல்.திருமாவளவன் பேசுகையில் “அண்ணன் விஐடி நிறுவனர், வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொறுப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன். 

வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கு பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அதனால்தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியைச் செய்து வருகிறார். கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவங்களைச் சொன்னார். மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவலை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை. சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்ற கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றிப் பலமுறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி  தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு பல வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள். 

அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பறிபோகக் கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்தத் தெளிவு, அந்தப் பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறார் என்பதால்தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிரது. இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்கிறார்கள், அதற்குக் காரணம், தரமான கல்வி வழங்குவதுதான். அதனால்தான் இப்படி ஒரு சிறப்பான பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதைத் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் எங்கே இருக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு அண்ணனின் அருமை தெரிந்திருக்கிறது. அவருக்கு இந்தக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்கள், கல்வி தளத்தில் ஆற்றி வருகின்ற பணிகள் பாராட்டுக்குரியவை, போற்றக்கூடியவை என்றாலும், தமிழுக்காகவும், தமிழ் தேசியத்திற்கும் அவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் மேலும் சிறப்பானவை. எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் அண்ணன் வழியில் பணியாற்றி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வரும் கட்சி என்பதால்தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டினார். அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.