Skip to main content

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி. காரை மறித்து மீண்டும் மீண்டும் முற்றுகையிட்ட மக்கள்!

Published on 26/08/2018 | Edited on 26/08/2018
mi

 

அடுத்த தேர்தலை குறி வைத்து ஆளும் அ.தி.மு.க. அரசு அந்த அந்த மாவட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் எம்.பிகள் துணையோடு மக்களிடம் குறைகேட்டும், புதிய திட்டங்களை துவங்க நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த சொல்லி உத்தரவியிட்ட நிலையில் கரூர் பகுதியில் எம்.பி. தம்பிதுரை, மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சென்ற காரை கரூர் மக்கள் மறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில், துண்டுபெருமாள் பாளையம், தன்னாசிக்கவுண்டனூர், பூலாம் பாளையம், செல்லரப்பாளையம், மாங்காசோழிப்பாளையம், பெரியவடுகப்பட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்களின் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். அப்போது, செல்லரப்பாளையம் பகுதியில் காவிரி மற்றும் அமராவதி ஆறு அருகில் இருந்தும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்றும், பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்றும், ஆவேசமாக அவர்களை முற்றுகை யிட்டனர். 

 

இதை தொடர்ந்து அதிகாரிகளும், அ.தி.மு.க கட்சியினரும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  ஆனால்,  மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாங்காசோளிப்பாளையம் ரயில்வே கேட் அருகே உள்ள மக்கள் திடீரென்று வாகனத்தினை மறித்து அதே குடிநீர் பிரச்சினை மற்றும் மின்சாரப் பற்றாக்குறையினை குறித்து முறையிட்டனர்.

 

பின்பு வாகனத்தினை விட்டு கீழே இறங்கிய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடனே நிவர்த்தி செய்வதாக கேமிராவை பார்த்து கூறி பின்பு கலைந்து சென்றனர். இதே போல,, ஆங்காங்கே, தன்னாசிக்கவுண்டனூர், பூலாம்பாளையம் பகுதியிலும் இதே பிரச்சினை நீடித்தது. தொகுதியில் இது குறித்து மக்களிடம் கேட்ட போது, ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான பிரச்சினைகள் உள்ள நிலையில் சாலைகள் மட்டுமே பூமி பூஜை போடுவதும், புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை போடுவது மட்டுமே இவர்களது வேலையாக உள்ளது என்று புகார் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்