Skip to main content

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.