Minister Ma Subramanian says I dont know what this allegation 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 32) என்பவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கைது செய்தனர். இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கில் நேற்று (02.06.2025) தீர்ப்பு விவரங்கள் அறிவிக்கப்பட்டன். அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார்.

அதோடு ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தொடர்பாக தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர், அமைச்சர் மா. சுப்ரமணியன் மீது கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சேகர்பாபு பேசுகையில், “அவர் குற்றச்சாட்டே சொல்லாத நாள் இருந்தால் தான் இது போன்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். திரும்பக் குற்றச்சாட்டு வைத்தால் சரியாக இருக்குமோ?. அந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டவர் அவர் தான் என்று சொல்ல வேண்டும். அதற்கு என்ன பதில் சொல்வார்.

Advertisment

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. ஆதாரங்கள் இருந்தால் வெளியிடலாம். நீதிமன்றத்தை அணுகலாம். மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. எது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வரின் வசம் உள்ள காவல்துறை மிகச் சிறப்பான நடவடிக்கையை எடுத்து 5 மாத காலத்தில் மிகப்பெரிய தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது. நீதிபதியே காவல்துறையின் சிறப்பு மிகுந்த செயல்பாட்டிற்குப் பெரிய அளவில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சண்முகம் என்ற வட்ட செயலாளர் எனக்கு போன் செய்ததாகத் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இது ஒரு குற்றச்சாட்டா?. நான் ஒரு மாவட்டச் செயலாளர். என் தலைமையின் கீழ் 83 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். தினசரி 10 முதல் 15 வட்டச் செயலாளர்கள் வரை தினசரி போன் செய்வார்கள். இந்த தேதியில், இத்தனை மணிக்கு போன் செய்தார்கள் மா. சுப்பிரமணியனுக்கு போன் செய்தார் என்பதற்காக மா. சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை” எனப் பதிலளித்தார்.