Skip to main content

“எங்கள் கூட்டணி வேட்பாளர் துரை வைகோவை வெற்றி பெறச் செய்யுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Minister KN Nehru campaigned in favor of Durai Vaiko

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை  திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி பீம் நகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் கே.என்.நேரு திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை அறிமுகம் செய்து வைத்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து  மார்சிங்பேட்டை, ஒத்தக்கடை, பெரிய மிளகுபாறை, பொன்நகர், காமராஜ புரம், கருமண்டபம், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கிராப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்து அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, “இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. எந்த பணிகள் செய்தாலும் இந்த பகுதியில் பணிகள் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு கொடுத்து வருகிறீர்கள். நாங்கள் கூட்டணி கட்சிக்கு எப்போதுமே விசுவாசமாகவும், நியாயமாகவும் இருந்து வருகிறோம். நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமை எந்த கட்சி வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து துரை வைகோ பேசும்போது, 10 ஆண்டுகளாக பாசிச ஆட்சி செய்து வரும் பா.ஜனதா ஆட்சியை அகற்றிடும் வகையில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்கள் இங்கு திரண்டு இருப்பதை காண முடிகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஏழைக் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கியுள்ளார். இதனை செய்ய முடியாது என்று பலரும் கூறினார்கள். அதை செய்து காட்டியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தற்போது இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியை 15 லட்சம் ஏழை குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். நம்முடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தல் முடிந்தவுடன் 1 கோடியே 60 லட்சம் குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தில் பயன் அடைவார்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டும் அல்ல இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம். மேலும் தற்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை தேர்தலுக்கு பின் பா.ஜனதா ஆட்சியை அகற்றி இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோல் ரூ.75-ம், டீசல் ரூ.65, சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ. 500 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எண்ணை தீப்பெட்டி சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகரச் செயலாளர் மதிவாணன், ம.தி.மு.க. அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன், தொகுதி பொறுப்பாளர் பூமிநாதன் எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹையா,  காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜன் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்