ADVERTISEMENT

“இரட்டை இலைக்கெல்லாம் ஓட்டு விழுகாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

05:30 PM Mar 25, 2024 | tarivazhagan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவந்தார். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி, சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் வேட்பாளர் சச்சிதானந்தம் கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

ADVERTISEMENT

அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, “கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றியை பெற்ற திமுக வேட்பாளர் வேலுச்சாமி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசா கூட வீணாக்காமல் திண்டுக்கல் தொகுதி முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக இதுவரை செல்போன் டவர் வசதி இல்லாத மலைக்கிராம மக்களுக்கு செல்போன் டவர் வசதி செய்து கொடுத்ததோடு பழனி, மற்றும் திண்டுக்கல் - மதுரை இருப்புப்பாதையில் தரை வழிப்பாலங்கள் கட்டிக்கொடுத்து பொதுமக்களுக்கு சிரமங்களை குறைத்தார்.

ADVERTISEMENT

நிலக்கோட்டை தொகுதியில் நீர்வரத்து பாதைகளை சீரமைத்து குளங்களுக்கு தனது சொந்த செலவில் தண்ணீர் வரச்செய்தவர் எம்.பி.வேலுச்சாமி. இதுதவிர ஆத்தூர் தொகுதியில் சமுதாய கூடங்கள், நிழற்குடைகள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக்கடைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிக அளவில் வழங்கியுள்ளார். அவரைப் போல சி.பி.எம். கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தமும் மக்கள் நலன் பணிகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர்.

இப்போது திண்டுக்கல்லில் போட்டியிடும் வேட்பாளர்களில் மண்ணின் மைந்தராக இருப்பவர் நமது தோழர் சச்சிதானந்தம் ஒருவரே. பிற கட்சிகளான அதிமுக, பா.ம.க.வேட்பாளர் இருவரும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தோழர் சச்சிதானந்தத்தின் குடும்பம் விவசாய குடும்பமாகும். மூன்று முறை காமாட்சிபுரம் ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறப்புடன் நிர்வாகம் செய்தவர். இதுதவிர 24 மணி நேரமும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடக்கூடியவர்.

இவரைப்போல ஒருவரை தேர்வு செய்தால்தான் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலில் சச்சிதானந்தம் அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு திண்டுக்கல்லிலிருந்து தினசரி சென்னைக்கு ரயில் வசதியும் இதுபோல திண்டுக்கல்லிலிருந்து பழனி மார்க்கமாக ஈரோட்டுக்கு ரயில் வசதியும் செய்து கொடுப்பார்” என்றார்.

அப்போது நிருபர்கள் நத்தம் விசுவநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் இரட்டை இலை சின்னத்தில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். அமோக வெற்றி கிடைக்கும் என கூறுகின்றனர். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்டனர். “இரட்டை இலையை காண்பித்து ஓட்டு வாங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்கள் அனுதினமும் மக்களுக்கு யார் நல்லாட்சி செய்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். இரட்டை இலையை வேண்டுமானால் போர்வையில் பிரிண்ட் செய்து போர்த்திக்கொள்ளலாமே தவிர வெற்றி பெறலாம் என்பதெல்லாம் பகல் கனவு என்றார். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழக மக்களிடமிருந்து 6 லட்சம் கோடியை வரியாக வசூல் செய்துவிட்டு 1.5லட்சம் கோடியை திருப்பி நமக்கு தந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரட்டை இலைக்கெல்லாம் ஓட்டு விழுகாது என்று” கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT