Skip to main content

“இதைத்தான் முதலிலேயே நான் சொன்னேன்” - மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Minister Duraimurugan's response to DK Sivakumar's comment on the Meghadatu Dam issue

 

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் சமீபத்தில்  கூறியிருந்தார். இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்” எனக் கூறி இருந்தார்.

 

தொடர்ந்து கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தனது ட்விட்டர் பதிவில், "மேகதாதுவில் அணை கட்ட ரூ. 1000 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த பணம் செலவிடப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த அந்த பணம் பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும் தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாசன நீரும் சாமானியர்களுக்கு குடிநீரும் வழங்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். அண்டை மாநிலங்களில் உள்ள சகோதர சகோதரிகளாக வாழ விடுங்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றுபடுவோம்" என தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில், டி.கே சிவக்குமார், அணை கட்டப்பட்டால் இரு மாநில மக்களும் பயனடைவார்கள். தமிழக மக்களை நான் வெறுக்கவில்லை. தமிழக அரசுடன் இணைந்து பேசி செயல்படவும் தயார் என்று சொல்லியுள்ளார். மேகதாது விவகாரத்தில் சமரசத்திற்கு இடம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “இதைத்தான் முதலிலேயே நான் சொன்னேன். அவர் இப்போது தான் பதவிக்கு வந்துள்ளார். காவிரிப்பிரச்சனையை முழுக்க அவர் அறிந்திருக்க நியாயமில்லை. மேகதாது கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும். ஆகையால் எந்த ரூபத்திலும் எந்த பேச்சுவார்த்தையிலும் மேகதாது கட்டுவதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது. காவேரி நடுவர் மன்றத்திலும் மேகதாது அணை கட்டு பிரச்சனையே வரவில்லை. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இப்பிரச்சனை எழவில்லை. இடையில் சிலர் இதை தூக்கி பிடித்துக்கொண்டுள்ளார். அதைத்தான் சிவக்குமார் தெரிவித்துள்ளார்” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.

Next Story

“பெரியவர் மோடி... சீதைக்கு சித்தப்பா...” - தன் ஸ்டைலில் விளாசிய அமைச்சர்  துரைமுருகன்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Duraimurugan speech on Candidate intro meeting in vellore

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “யாராக இருந்தாலும் அண்ணா பேரை சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.

தி.மு.க.வை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க. நாங்க படா படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது. ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார் அவரையே நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்.

லால்பகதூர் சாஸ்திரி, தனிநாடு கேட்டால் கட்சியை தடை செய்வேன் என்றார். அதை சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா. அண்ணாவை மட்டும் கலைஞர் சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதிக்காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள். நான் இதனை உடனடியாக கலைஞரிடம் போய் சொன்னேன். அதற்கு கலைஞர், ‘எம்.ஜி.ஆர். திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிக பொருத்தமானவர். நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும்’ என சொன்னார். இதை அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, ‘தலைவரா அப்படி சொன்னார்’ என மிக உருக்கமாக பேசினார் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.

தி.மு.க.வை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் என பேசுகிறார் பெரியவர் மோடி. தி.மு.க.காரன் வெளியில் வரும்போது வாயில் வாய்க்கரிசியைப் போட்டுக் கொண்டு வருபவன். எதற்கும் துணிந்தவன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்ப சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள்” எனப்  பேசினார்.