Minister C.V.Shanmugam speech at vizhupuram admk meeting

Advertisment

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.கசார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழகப்பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அ.தி.மு.க தொண்டர்கள் கழகத்தின் மீது எப்போதும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். தங்களது உழைப்பைக் கொடுத்து அ.தி.மு.கஆட்சியை மீண்டும் மலரச் செய்வார்கள். அ.தி.மு.கதொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டுவரச் சபதம் ஏற்போம்.

கட்சியின் கரை வேட்டி கட்டிக்கொண்டு நடப்பதை நமது கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் பெருமையாக நினைப்பார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இறப்பதற்கு முன்பு கடைசியாகப் பேசிய வார்த்தைகள் “என் மறைவிற்குப் பிறகும் நூறாண்டுகாலம் நம் கட்சியும் ஆட்சியும் தமிழகத்தில் மலர வேண்டும், தொடர வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் தி.மு.க என்பது குடும்ப அரசியல் இயக்கம். அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கான இயக்கம்.

Advertisment

மறைந்த எம்.ஜி.ஆரின் கனவை நினைவாக்க, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.கஆட்சியைக் கொண்டுவருவதற்காக, மறைந்த நமது முதல்வர் ஜெயலலிதா கடுமையாகப் பாடுபட்டதைப்போல, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.கஆட்சி மலர, நமது கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் சிறப்பான, எளிமையான ஆட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு உடனுக்குடன் எளிதாகச் சென்று சேர்கிறது. தமிழகத்தில் தி.மு.கஆட்சிக்குவந்தால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை மதிப்போடும் மரியாதையோடும் நடத்துபவர்கள் அ.தி.மு.க.வினர்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுகின்றனர். இவர்கள், ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசு அலுவலர்களின் நிலைமை என்னவாகும் என்று நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை, பழங்குடியின மக்களை தரக்குறைவாகப் பேசியது தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி. இதுதான் தி.மு.க.வின் உண்மை நிலை.

தமிழக மாணவர்களின் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.கஅரசு. அவர்களின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளது நமது அரசு. தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கதொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து, இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால், நாம் இத்தனை ஆண்டு காலம் பட்ட கஷ்டங்கள் வீண்போய்விடும். இதற்குத் தொண்டர்கள் சிறிதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

Advertisment

அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் உள்ள இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை எதிர்ப்பாகக் கருதக் கூடாது. அ.தி.மு.கஆட்சி, தமிழகத்தில் மலர்வதற்குப் பெரும் துணையாக இருந்தது, இருப்பது, இருக்கப்போவது இளைஞர்களும் இளம்பெண்கள் பாசறையினர்தான். தமிழகத்தில் மக்களுக்குப் பயனுள்ள அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்காகக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியின்போதுதான். அதேபோன்று தற்போது சிறப்பாக நமது ஆட்சி நடந்துவருகிறது. அது தொடர வேண்டும்.

கட்சியில் உழைக்கும் தொண்டர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்ப்பது அ.தி.மு.ககட்சியில்தான். தி.மு.க.வில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. எளிய தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.கமூத்த நிர்வாகிகள் வழிகாட்டுதலின்படி இளைஞர்கள் நடந்து, தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் அ.தி.மு.கஇளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணி செய்ய வேண்டும். வருகின்ற தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்ற நிலையை எடுக்கக்கூடிய தேர்தல்.

இந்தத் தேர்தலில் இளைஞர் அணி, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி என அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டு நாட்களில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். இளைஞர்கள் கடும் பணியாற்றிட வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கின்றது.” இவ்வாறு அ.தி.மு.கநிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பாகப் பேசினார்.

கூட்டத்திற்கு வருகைதந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடல் சாப்பாடு ஏற்பாடுகள் நடைபெற்றன. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.கதனது கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி, அவர்களை தயார்ப்படுத்தி வருகிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ள செயல்வீரர்கள் கூட்டம்.