
திருச்சி மலைக்கோட்டை, சரக்கு பாறை பகுதியில் நேற்று திமுக சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில், இந்தித் திணிப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அன்று டாக்டர் கலைஞர் இந்தியை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என்று கூறினார். அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது நமக்குப் பின்னால் நம்முடைய தொண்டர்கள் அதை எதிர்ப்பார்கள் என்று. இந்தி மொழியில் தான் படிக்க வேண்டும் பட்டம் பெற வேண்டும் இந்தியைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை என்று தொடர்ந்து தமிழகத்தின் மீது திணிக்கும் நடைமுறையை ஆளும் ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. எனவே அதை எப்போதும் எதிர்த்து நிற்போம்” என்று கூறினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், குணசேகரன் லீலாவேலு உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.