“யார் உத்தரவின் பேரில் மைக் அணைக்கப்பட்டது” - திருச்சி சிவா எம்.பி ஆவேசம் 

Mike switched off on whose order Trichy Siva MP 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து நான்காம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 5 ஆம் நாளான இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதையடுத்து, மக்களவையில் மணிப்பூர் கொடூரம் குறித்துப் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

இதேபோன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று மாநிலங்களவையில் மணிப்பூர் கலவரக்கொடூரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போதுமைக் அணைக்கப்பட்டது குறித்து,அவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா “மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை மாநிலங்களவையில் எப்போதும் நடந்ததில்லை. ஏன் மைக் அணைக்கப்பட்டது. யார் உத்தரவின் பேரில் இந்தச் செயல் நடந்தது” எனக் கேள்வி எழுப்பித்தனது கடுமையான கண்டனத்தைத்தெரிவித்து இருந்தார். அதற்கு மாநிலங்களவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் “கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை” எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து அவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையை நண்பகல் 12 மணி வரை மாநிலங்களவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் ஒத்திவைத்தார். இதையடுத்து, இரு அவைகளும் மீண்டும் கூடிய நிலையில் மக்களவை மீண்டும் பிற்பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு இடையே கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்
Subscribe