MGR Memorial Day and Leaders Tribute...

Advertisment

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இன்றும் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ட்விட்டரில் பல்வேறு கட்சித் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு புகழஞ்சலி செலுத்தினர். அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்துத்தந்த பாதையில் பயணிப்பதையேபெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி” எனக் கூறியுள்ளார்.

Advertisment

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், “மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்று வரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி, சின்னம் என்றால் இரட்டை இலை, தலைவன் என்றால் எம்.ஜி.ஆர் என கடைக்கோடி மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்து, அஇஅதிமுகவிற்கு வெற்றியை மட்டுமே பரிசாகக் கொடுத்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களை போற்றி வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.