/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ma subramanian.jpg)
கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக யார் காரணம்? என்ற உண்மை தெரியாமல் உளறியிருக்கும் சைதை துரைசாமிக்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும், சைதை துரைசாமியின் உண்மைக் கதைகள் பல வெளியே வரும் என எச்சரிப்பதாகவும் கூறியிருக்கிறார் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கோயம்பேடு பேருந்துநிலையம் உருவாக நடவடிக்கை எடுத்தவர் எம்.ஜி.ஆர்.’ என்று நேற்றைய (3-10-2018) தினம் சைதை துரைசாமி அவர்கள் பொய்யான - ஆதாரமற்ற நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘‘தாம்தான் இந்தத் திட்டத்தினை எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னையில் எந்தப் பகுதியில் எல்லாம் மாற்றம் வேண்டுமென்று” மனுவாகக் கொடுத்தாக தெரிவித்துள்ளார்.
சைதை துரைசாமி அவர்களுக்கு இதுபோல் பொய்யான - ஆதாரமற்ற செய்திகளை சொல்வது புதிதான ஒன்றல்ல என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1987ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24ஆம் தேதி மறைவுற்றார். கோயம்பேடு பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டதென்பது தமிழினக் காவலர் கலைஞர் அவர்களால் தி.மு. கழக ஆட்சியில் 6-6-1999 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு உருபெற்றது. எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 12 ஆண்டுகள் கழித்து இந்தப் பணி முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது. சைதை துரைசாமி அவர்கள் சொல்வதைப் போல் 1987ஆம் ஆண்டே இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதென்றால் இந்தப் பேருந்து நிலையம் அமைய நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவரங்கள், அதற்கான திட்ட மதிப்பீடுகள், நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அரசாணை, ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற எதையாவது ஆதாரமாக வெளியிட தயாராக இருக்கிறாரா? என்பதை அறிய விரும்புகிறோம்.
1987இல் எம்.ஜி.ஆரால் உருவான திட்டமென்றால் 1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கானப் பணிகளை ஏன் அப்போது செய்யவில்லை என்பதை குறைந்தபட்ச அறிவுள்ளவன்கூட அறிய விரும்புவான்.
தமிழினக் காவலர் கலைஞர், கழகத் தலைவர் வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி ஆகியோரின் அறிவார்ந்த ஆலோசனைகளின்படி, தி.மு.கழக மாநகராட்சி நிர்வாகத்தில் நிறைவேற்றப்பட்டு உருவாக்கப்பட்ட சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நாளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட ‘அல்பெண்டசோல்’ எனும் குடற்புழுக்களை நீக்கும் மாத்திரைகள் வழங்கும் திட்டம் மாநகராட்சியின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கும் திட்டமும் இந்தியாவிலேயே முதன்முறையாக கழக மாநகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் ஒருசிலவையாகும். இந்த உண்மையை மாநகர மக்கள் நன்கறிவார்கள்.
ஆனால் 2011ஆம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஓராண்டு சாதனையாக 2012இல் மேற்குறிப்பிட்ட இந்த இரு திட்டங்களையும் இந்தியாவிலேயே தாங்கள் தான் முதன்முறையாக செய்ததாக, உண்மைக்கு புறம்பாக விளம்பரங்களை வெளியிட்டு, கொண்டாடி கொண்டவர்கள்தான் இந்த உத்தமசீலர்கள்.
இதேபோல் கழக ஆட்சிக்காலத்தில் தமிழினக் காவலர் கலைஞர் அவர்களாலும், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் தீவிர முயற்சியினாலும் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் தங்களுடையதுதான் என்று தவறானப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்கள்தான் அதிமுகவைச் சார்ந்த அதிபுத்திசாலிகள். ஆனால் சட்டமன்றத்தில் எந்ததெந்த தேதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் சென்னைக்கு வருவதற்கு திமுக காரணமாக இருந்ததென்றும், அது வரக்கூடாது என்பதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் ஆதாரங்களை யெல்லாம் சட்டமன்றத்தில் எடுத்துச்சொன்னதற்குப் பிறகு, ஜெயலலிதாவே ஆமாம் திமுகதான் அந்தத்திட்டத்தை கொண்டு வந்தது என்று தன்னையும் அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்ட செய்தியை சைதை துரைசாமி அறிந்திருக்க நியாயமில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai koyambedu.jpg)
அரசியலில் முகவரி இழந்துவிட்ட சைதை துரைசாமி போன்றவர்கள் எம்.ஜி.ஆர். என்ற முகவரி அட்டையை வைத்துக்கொண்டு அட்ரஸ் தேடி அலைந்து கொண்டிருக்கும் நேரம் இது. அவர்களுக்கான முகவரியைத் தேடுவதில் நமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதாக நினைத்து, முத்தமிழறிஞர்-தமிழினக் காவலர் கலைஞர் அவர்களை சீண்டுகின்ற வேலையைச் செய்தால் பொறுத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
தமிழினக் காவலர் கலைஞருக்கும்- மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குமான 40 ஆண்டு கால நட்பு அரசியல் பிரிவுக்குப் பிறகும் அவர்கள் இருவராலேயுமே போற்றப்பட்ட நட்பு. அதனைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ எம்.ஜி.ஆர் தயவால் மட்டுமே தமிழினக் காவலர் கலைஞர் அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்றது போல சைதை துரைசாமி பேசுவது அவர் இன்னும் விசிலடிச்சான் குஞ்சு ரசிகனாகவே இருக்கிறார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆரின் சினிமாப் புகழ் தி.மு.கழகத்திற்கும் அவரது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்கும் பயன்பட்டது என்றால், அந்த சினிமாவில் அவர் புகழ் பெறுவதற்குத் துணை நின்றவர் தமிழினக் காவலர் கலைஞர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தின் வெற்றிக்குக்காரணம் கலைஞரின் வசனமே. அதுபோல, மந்திரிகுமாரி படம்தான் எம்.ஜி.ஆரின் முதல் சூப்பர் ஹிட் படம். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதற்கு படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன் ஒப்புக் கொள்ளவில்லை. படத்தின் தயாரிப்பாளரான மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் முன் நிற்பதற்குக்கூட நடிகர்கள் பயந்து கொண்டிருந்த காலம் அது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் முன் சரிக்கு சமமாக நாற்காலியில் உட்கார்ந்து பேசக்கூடிய படைப்பாளர்கள். அந்த உரிமையில், தமிழினக் காவலர் கலைஞர் அவர்கள் மந்திரிகுமாரி படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் என்பதே வரலாறு. தமிழினக் காவலர் கலைஞர் பெற்றுத் தந்த அந்த வாய்ப்பிற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர் முழுமையாக கதாநாயகனாக பல வெற்றிப் படங்களைத் தந்தார் என்பதை வரலாறு மறக்கவில்லை. ஏன், தமிழினக்காவலர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்கூட இதனை மறக்கவில்லை. அவர்களின் நட்புக் காலத்தில் ஒருவருக்கொருவர் பல உதவிகளை செய்ததை அவர்கள் நன்றி மறக்காமல் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்களிடம் அந்த நன்றி விசுவாசம் இருந்ததா?
திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று திரையுலகத்தினர் வைத்த கோரிக்கையை நிராகரித்த ஜெயலலிதா, தன்னுடையை பெயரையே சூட்டிக் கொண்டபோது இன்றைக்கு குதியாட்டம் போடுகிற ‘கோயம்பேடு கோயபல்ஸ்’ சைதை துரைசாமி எங்கே போனார்? அந்தத் திரைப்பட நகருக்கு தன்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டியவர் தமிழினக் காவலர் கலைஞர்தான் என்பதையாவது நன்றியுடன் நினைத்துப் பார்ப்பாரா சைதை துரைசாமி? மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியவர் தமிழினக் காவலர் கலைஞர்தான் என்பதாவது நினைவிருக்கிறதா?
2016ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி 2017 ஜனவரியில் நிறைவடைந்திருக்க வேண்டிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, காலதமாதமாக 2017ல் தொடங்கி 2018 செப்டம்பரில் நிறைவு செய்திருக்கிறார்களே இந்த அலட்சியம் குறித்து எம்.ஜி.ஆர் விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சைதை துரைசாமி கேள்வியாவது எழுப்பியதுண்டா? 2016 ஜனவரியில் முதலமைச்சர் பதவியில் ஜெயலலிதாதானே இருந்தார்? அவரிடம் ஏன் இது பற்றிக் கேட்கவில்லை. அவர் போட்ட மேயர் பதவி என்கிற பிச்சை பாத்திரம் பறிக்கப்பட்டு விடும் என்ற பயமா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Saidai Duraisamy.jpg)
பதவியை அனுபவிக்கும்வரை உண்மை பேச திராணியற்ற சைதை துரைசாமி, பதவி போன பிறகு, பொய்களுக்குக் கூட உண்மையைப் போல ஒப்பனை போட நினைக்கிறார். அது எடுபடாது என்பதை நினைவில் கொள்ளட்டும். ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் கட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க ஆட்சி என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். அதனால்தான் அதற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைப்பதைத் தவிர்த்து, அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றிய திட்டம் ஏதாவது இருந்தால் அதற்குப் பெயர் வையுங்கள் என எங்கள் தலைவர் தளபதி சொன்னதில் என்ன தவறு?
நீங்கள் பெற்ற குழந்தைக்குப் பெயர் வைப்பதை விடுத்து, அடுத்தவர் குழந்தைக்கு ஏன் உங்கள் பெயர் வைக்கிறீர்கள் என கழகத் தலைவர் தளபதி நியாயமான கேள்வி கேட்டார். சைதை துரைசாமியோ, அடுத்தவர் குழந்தைக்கு அல்ல.. பிறக்காத குழந்தைக்கு தூளி கட்டி லாலி பாடுவது போல கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். கழகத் தலைவர் தளபதி அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு, தமிழினக் காவலர் கலைஞர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுவாரேயானால், சைதை துரைசாமியின் உண்மைக் கதைகள் பல வெளியே வரும் என எச்சரிக்கிறேன்.
தமிழகத்தின் நலனுக்காகவே முழுமையாக தம்மை ஒப்படைத்துக்கொண்டு அல்லும், பகலும் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லாத தற்குறி சைதை துரைசாமி திமு கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என்பதை நாடறியும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)