rajendra balaji sellur raju

Advertisment

ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பலகோடி ரூபாய் மோசடி உறுதியான பிறகும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் அவர்கள்என்பதால்தான் என்கிறது ஆவின் வட்டார தகவல். மேலும்அமைச்சர்கள்தலையீடு காரணமா எனவும்கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கு, குறைந்த வட்டியில் நீண்ட கால, குறுகிய கால கடன்கள் வழங்கவும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சிக்கனமாக சேமிக்கும் பழக்கத்தையும் உருவாக்கிடும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது "மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயசங்கம்". இது போன்றே மத்திய - மாநில அரசுகளின் எல்லாதுறைகளுக்கும் தனித்தனியாக கூட்டுறவு நாணயச் சங்கங்கள் உண்டு. இவை அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும்.

இச்சங்கங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று, நிர்வாகச் செலவுகளுக்கு இரண்டு சதவிகித கூடுதல் வட்டி நிர்ணயித்து, சங்க உறுப்பினர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன் வழங்கிடும்.

Advertisment

அவ்வாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தைவிட குறைவான வட்டியில், பி கிளாஸ் அங்கத்தினர்கள் மூலம் நீண்ட கால வைப்புத் தொகை பெற்று சங்கத்தின் இலாபத்தை இரட்டிப்பாக்கி கொள்ளும். இதுபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள சங்கங்கள் பெருமளவு நிரந்தர வைப்புத் தொகைகளை பெற்று சுயசார்பில் (பிரதமர் மோடிக்கு பிடித்தமான சொல்) நல்ல இலாப நோக்கத்தில் செயல்பட்டு வந்தன.

கூட்டுறவுதுறை அமைச்சராக செல்லூர் ராஜு வந்தவுடன் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சிக்கன மற்றும் நாணயசங்கங்களில் பல்வேறு முறைகேடுகளுக்கு இராஜப்பாட்டை விரிக்கப்பட்டது. அப்படி முறைகேடுகள் நடந்த சங்கங்களில், ஒரு கின்னஸ் சாதனைப்போல், ரூபாய் 7,92,41,616/ (சுமார் 8கோடி ரூபாய்) என்றளவுக்கு கையாடல் நடந்துள்ளது.

சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட பாரம்பரியமிக்க "மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயசங்கமானஇந்த கூட்டுறவு சங்கத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத் தொகையை குருவி சேர்ப்பது போல் சிறுக, சிறுக சேமித்து வைத்து வந்த நிலையில் அச்சங்கத்தின் தலைவர் பாண்டி மற்றும் உபதலைவர் பரமானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து ஓய்வுபெற்ற ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து மேற்கண்ட தொகையை முறைகேடாக கையாடல் செய்துள்ள விசயத்தை கடந்த 2017-2018ம் நிதியாண்டிற்கான கணக்குகள் தணிக்கை செய்யும் அதிகாரிகள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளதோடு அந்த தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமலும், அவர்கள் கையாடல் செய்த பணத்தைத் திருப்பி வசூலிக்காமலும் ஆவின் நிர்வாகமும், கூட்டுறவு துறையும் அமைதி காப்பது அதிர்ச்சியளிக்கிறது.

nakkheeran app

மேலும் மதுரை ஆவின் தொழிற்சங்க மாவட்ட தலைவராக இருக்கும் பாண்டி, மற்றும் பரமானந்தம் ஆகியோர் ஏற்கெனவே மதுரை ஆவினில் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டும் நிலுவையில் உள்ள நிலையில் மதுரை பால் பண்ணை சிக்கன நாணயசங்கத்தில் சுமார் 8கோடி ரூபாய் வரை கையாடல் செய்தது உறுதியான பிறகும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்பதால்தான் என்கிறது ஆவின் வட்டார தகவல்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைகிளையில், வழக்கு எண் 1340/2020 மாண்புமிகு நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா அவர்கள் அமர்வில் கடந்த 27.02.2020 அன்று வந்த போது, கடுமையான அதிருப்தியை தெரிவிக்க, குற்றங்களை ஒப்புக்கொண்டு, "மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தின் சார்பில் அரசு ப்ளீடர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதியரசர் ரிசர்வ் வங்கியையும் எதிர்மனுதாரராக சுயோ மோட்டோ அடிப்படையில் இணைத்து வழக்கை 13.03.2020 க்கு ஒத்தி வைத்திருந்தார். வழக்கு கொரோனாவால் மீண்டும் எடுக்கப்படாமல் இருப்பதால் அன்றைய தினமே மதுரை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சங்கத்தின் முறைகேட்டை உறுதி செய்து, கூட்டுறவுச் சட்ட விதிகளின் படி அவரின் செயல்முறை ஆணைகள் கடித எண் ந.க 1228/2019 சட்டப்பணிகள் நாள் 27.02.2020 தண்டத்தீர்வைக்கு உத்தரவிட்டு, வணிக குற்றப் புலனாய்வு பிரிவிக்கும் புகார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற முதுநிலைப் பணியாளர் சிதம்பரம் என்பவர் தனது முதலீடு மோசடியானதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மிகுந்த நோய்வாய்ப்பட்டு மருந்து கூட வாங்க முடியாத நிலையில் மரணம் அடைந்த வேதனை நிறைந்த சோகமான சம்பவமும் நடந்துள்ளது. இவ்வளவு விவகாரங்கள் நடந்து, அவை முதல்வர் அலுவலகம் வரை புகார் சென்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் அவர்களுக்கும், தொடர்புடைய கூட்டுறவு அமைப்பின் உயர் அலுவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்து முறையிட்டும் இதுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல், குற்றம் செய்தவர்கள் அமைச்சர்களின் ஆதரவோடு தைரியமாக உலா வந்து கொண்டிருப்பது சட்டத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் தவறு செய்தவர்களை கைது செய்யவும், அவர்கள் கையாடல் செய்த சுமார் 8கோடி ரூபாய் பணத்தை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.