
10வது ஆண்டாக இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று (24.05.2025) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்தி பேசியிருந்தார். நிதி ஆயோக் கூட்டம் முடிந்த நிலையில் நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்யணும் என்ன பாக்கி இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டு கூட்டத்தில் பேசியிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கல்வித்துறைக்கான தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி; கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள்; அங்குள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவது; சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்' என்றார்.

முதல்வரின் டெல்லி பயணம் குறித்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் விஜய் ஆகியோர் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். குறிப்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்' என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைத்தளமான 'எக்ஸ்' பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்! ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை! டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது!' என தெரிவித்துள்ளார்.