Advertisment

படத்தில் தன்னை ஹீரோவாக நினைப்பதுபோல நிஜத்தில் மோடியை நினைக்கிறார் - ரஜினி குறித்து மனுஷ்யபுத்திரன்

​rajini

Advertisment

சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவரிடம், பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,

மோடியின் பலம் என்பது தொடர்ந்து மிகைப்படுத்தி காட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரைக்கும் 1989க்கு பிறகு தொடர்ந்து கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. இதற்கு பாஜகவும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவின் அரசியல் என்பதே கூட்டாட்சியை நோக்கி சென்றுவிட்டது.

எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்தபோதும் கூட பாஜக தனித்து வெற்றிப்பெறவில்லை. அதிலும் பலபேர் கூட்டணியில் இருந்தனர். வடமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கூட்டணி வைத்திருந்தனர். மத்தியில் ஆளும் பாஜக, மோடி என்கிற தனிநபரால் வெற்றி பெற்று வந்துவிடவில்லை.

Advertisment

அப்படி இருக்கும்போது மோடியை பலசாலியாக ரஜினி புரிந்துகொண்டிருக்கிறார். கடந்த தேர்தலின்போது பாஜக 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றது. அப்படிப்பார்த்தால் 3ல் ஒரு பங்குதான் பாஜகவுக்கு இருந்தது. எதிர்க்கட்சிகள் சிதறி கிடந்தபோது, கூட்டணி வைத்துத்தான் இந்த வாக்குகளை பாஜக பெற்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதுதான் எதார்த்தம். அப்படியிருக்கும்போது அவரை தனிப்பெரும் சக்தியாக மிகைப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Manushyaputhiran

பாராளுமன்றத்தில் 400 இடங்களை வைத்திருந்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தியது. 67க்கு பிறகு இவை மாறுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைகிறது. இந்தியாவையே ஆண்ட கட்சி காங்கிரஸ் இன்று பல்வேறு வகைகளில் பலவீனம் அடைந்திருப்பதை பார்க்கிறோம். ஒரே ஒரு முறை தனித்து ஆட்சி அமைத்ததற்காக அவரை வெல்லவே முடியாத சக்திபோல் நம்புவது மிகவும் கேலிக்கூத்தானது.

நாடு முழுக்க இன்று பாஜகவுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அவர்கள் கையில் வைத்திருந்த பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள். பாஜகவின், மோடியின் சக்தியை ஊதி பெருக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாடு முழுக்க சரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் மோடி ஒரு தனி மனிதர் போன்றும், ஏதோ சிறுவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு அவரை எதிர்ப்பது போன்று ரஜினி நம்புவது வேடிக்கையாக உள்ளது.

படங்களில் நடிக்கும் சண்டைக்காட்சிகளில் எல்லோரையும் அடித்து போடுகிற ஒரு ஹீரோவாக தன்னை காட்டிக்கொள்வதுபோல, மோடியையும் நம்புகிறாரோ என்று தோன்றுகிறது. திரைப்படத்தில் வருவதும் சித்தரிக்கப்பட்டது. மோடியின் தனிபெரும் ஆற்றல், செல்வாக்கு என்பதும் சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

modi Manushyaputhiran rajini rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe