/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1-c-4_0.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில்இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்துமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து கலவரம் மற்றும் பதற்றமான சூழல் நிலவுகிறது.மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் மாநிலம் கடந்த 49 நாட்களாக எரிகிறது. இது குறித்து ஒரு வார்த்தை கூட கூறாமல் 50வது நாளில் பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மணிப்பூரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்திருக்கின்றனர். கலவரத்தின் போது எண்ணற்ற தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் தொடர்ந்து நிலைமை மோசமாகி வரும் நிலையில் இந்த கலவரம் மிசோரத்திலும் பரவத்தொடங்கி உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமரை தலையிட வலியுறுத்துவதற்காக அவரை சந்திக்க கடந்த பல நாட்களாக மணிப்பூர் தலைவர்கள் நேரம் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. மணிப்பூர் விவகாரம் ஒவ்வொரு நாளும் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கும்போதுபிரதமர் மோடியும், பாஜகவும்மோதல்நீடிக்க விரும்புவதையே காட்டுகிறது. மேலும், இதன் மூலம் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீர்வு காண விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. விஸ்வகுரு என தன்னைத்தானே கூறிக்கொள்பவர் மணிப்பூரின் குரலுக்கு எப்போது செவிமடுப்பார். பிரதமர் மோடி எப்போது நாட்டுக்கு அமைதிக்கான எளிய அழைப்பு விடுப்பார். அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்த மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மணிப்பூர் முதலமைச்சரிடம் எப்போது அவர் கேள்வி எழுப்புவார்” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)