Skip to main content

திமுகவா? அதிமுகவா? கேள்விக்குறியாகும் மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவி!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Manapparai mayoral post in question!

 

திருச்சியில் நகராட்சியில் உள்ள மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 கவுன்சிலர்கள் பதவி உள்ளன. இதில், 11 இடங்களில் திமுகவும், 11 இடங்களில் அதிமுகவும் வென்றன. மீதமுள்ள 5 இடங்களில் சுயேட்சைகள் வென்றனர். இதனால் மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேசமயம், சுயேட்சை கவுன்சிலர்கள் 5 பேர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் மணப்பாறையையும் திமுக கைப்பற்றும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 15 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது. திமுகவிற்கு 12 ஓட்டுக்களே கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மணப்பாறை நகராட்சித் தலைவராக அதிமுகவின் சுதா பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர், கடந்த மாதம் திடீரென அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரைச் சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் மணப்பாறை நகராட்சியில் திமுகவின் பலம் 14 ஆக உயர்ந்தது. அதிமுகவின் பலம் 13 ஆக குறைந்தது. இதனால் நகராட்சி பதவியை அதிமுக இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவின. 


இந்நிலையில் மீண்டும் மணப்பாறை நகராட்சி அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஐந்து சுயேட்சை கவுன்சிலர்களின் ஒருவரான செல்லம்மாள், இன்று திடீரென திருச்சி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் குமாரை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக மணப்பாறை நகராட்சியில்  கவுன்சிலர்களின் எண்ணிக்கை திமுக தரப்பில் 14 எனவும் அதிமுக தரப்பில் 14 எனவும் இருக்கிறது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்