ADVERTISEMENT

அமைச்சர்கள் மிரட்டல்... மெஜாரிட்டி இருந்தும் தேர்தலை புறக்கணித்த தி.மு.க. -இது ஒரு வினோதம் தான்!

06:38 PM Jan 30, 2020 | rajavel

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் பல ஊர்களில் சென்றமுறை பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. அப்படி ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம். இங்கு மொத்தம் 10 கவுன்சிலர்கள். இதில் திமுக ஆறு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒன்று, அதிமுக 3 பேர் வெற்றி பெற்றிருந்தனர். ஆக இது மிக எளிதாக திமுக வெற்றிபெறும் ஊராட்சி ஒன்றியமாக கருதப்பட்டது.

ADVERTISEMENT



இந்த நிலையில் சென்ற முறை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலில் வாக்களிக்கும்போது அதிமுக உறுப்பினர் நடராஜ் என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிகொண்டு ஓடிவிட்டார். இதனால்தான் அப்போது இத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இன்று அந்த தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

காலையில் பத்து முப்பதுக்கு எல்லாம் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஜாரிட்டியாக உள்ள திமுக கவுன்சிலர்கள் 7 பேரும் குறிப்பிட்ட நேரம் வரை வராமல் தேர்தலைப் புறக்கணித்தனர். இது மக்களுக்கு வியப்பாக இருந்த நிலையில், அங்கு வந்த திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் "எங்கள் உறுப்பினர்களை அதிமுக அமைச்சர்கள் கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவருமே பலமுறை மிரட்டி உள்ளார்கள். இந்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வெற்றி பெறக்கூடாது அதிமுக தான் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் மிரட்டி உள்ளார்கள்.

10 பேரில் மூன்று பேர் இருந்துகொண்டு நாங்கள் தான் தலைவராக வரவேண்டும் என கூறுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது இல்லை. மீறி இந்த தேர்தலில் எங்கள் கவுன்சிலர்கள் ஏழுபேரும் வந்தாலும் அதிகாரிகளை வைத்து அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது. இந்த தேர்தல் அதிகாரி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே தான் இன்று எங்கள் உறுப்பினர்களில் 7 பேரும் வாக்களிக்க வராமல் புறக்கணித்து விட்டனர்." என்றார். இதன்பிறகு தேர்தல் அதிகாரி பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தைக் கூறி தேர்தலை ரத்து செய்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து விட்டார்.


"அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என்று காரணம் கூறி தேர்தலை திமுக புறக்கணிப்பு செய்தது தவறு என்றும் திமுக உறுப்பினர்கள் 7 பேரும் ஒன்றாக இருக்கும்போது எப்படி 3 பேர் கொண்ட அதிமுக தலைவராக வெற்றி பெறுவார்கள்? ஒருவகையில் திமுகவினர் பயப்படுகிறார்கள் போல தெரிகிறது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், சுயேச்சை மற்றும் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் இருந்தும் அதிமுகவுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு அதிமுக வெற்றி பெற்றது. அதுபோல் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் திமுக கோட்டை விடும் போல் தெரிகிறது. யார் மிரட்டினாலும் மெஜாட்டி கவுன்சிலர்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் பயப்பட வேண்டும்" என ஈரோடு மாவட்ட திமுக மூத்த உடன்பிறப்புகள் கூறுகிறார்கள்.

மேலும் அவர்கள் கூறும்போது கட்சித் தலைமை ஈரோடு மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி நடைபெற்ற இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த பகுதியையும் அதேபோல் மறைமுகத் தேர்தலில் திமுக அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த இடத்தையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட திமுக பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT