Skip to main content

நிதிஷ் குமாரிடம் மம்தா வைத்த ஒரே ஒரு கோரிக்கை; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறதா?

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Major move against BJP; Is the opposition coming together? Mamata Nitish meeting

 

பாஜகவை வீழ்த்துவது மட்டுமே அனைவரது எண்ணமாக இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று (24/04/2023) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைச் சந்தித்தார். அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இரு முதலமைச்சர்களின் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  

 

இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “பாஜகவிற்கு எதிரான கூட்டணியில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை. இந்த தேர்தல் பாஜகவிற்கும் மக்களுக்கும் இடையேயானதாக மட்டுமே இருக்கப்போகிறது. நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளேன். பீகாரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், நமக்கான அடுத்த இலக்கு என்ன என்று முடிவு செய்யலாம். ஆனால், முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்கும் ஆட்சேபனை இல்லை (அனைவரும் ஒன்றிணைவதில்) என்று முன்பே சொல்லிவிட்டேன். பாஜகவை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும். பாஜக ஊடகங்களின் உதவியாலும், அவர்கள் நாளுக்கு நாள் சொல்லும் போலி கதைகளாலும் பெரிய ஹீரோக்களாக மாறிவிட்டனர்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

மம்தாவின் '10 மணி அறிவிப்பு' - பதறிய பாஜக

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
BJP criticizes Mamata's '10 o'clock announcement'

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மம்தா பானர்ஜியிடம் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த அரசு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதனை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்' என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், 'ஏப்ரல், 2024 முதல், எங்கள் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக  ஒவ்வொரு மாதமும் ரூ.750, மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், எங்கள் மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருந்தாலும், அரசியல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது இன்று மேற்குவங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் அதனை திசைதிருப்ப மம்தா மேற்கொண்ட நூதன யுக்தி என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.