வதந்தியால் உயிர் பறிக்கப்பட்ட மதுரை வில்லாபுரம் இளைஞர் முஸ்தபா பற்றி வேதனையுடன் பதிவிட்டிருந்தோம். அதே வேதனைதான் தொகுதி எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனிடமும் வெளிப்பட்டுள்ளது. “முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப் பற்றி எழுதமுடியவில்லை. தொற்று நோயாளிகளைக் கண்டுபயந்து, விலகி அவர்களை ஊரை விட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூரமன நிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளாவில் கூலிவேலை பார்க்கச் சென்ற முஸ்தபா என்னும் இளைஞர் இரண்டு வாரங்களுக்குமுன் மதுரைக்குத் திரும்பி முல்லைநகரில் உள்ள அவர் அம்மாவுடன் வீட்டில் இருந்துள்ளார். இரண்டு மூன்று நாள்களாக காய்ச்சல் கொண்டிருந்ததால், வீட்டிலேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார்.

Advertisment

mp

இவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அக்கம், பக்கம் எங்கும் செய்தி பரவியுள்ளது. சிலர் காவல்துறைக்கும் போன்போட்டுச் சொல்லியுள்ளனர். காவலர்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். சிறிது நேரத்தில் குட்டியானை எனச் சொல்லப்படுகின்ற டாட்டா ஏஸ் வண்டியில் முஸ்தபாவையும், அவர் அம்மாவையும் ஏற்றுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சோதித்துவிட்டு இது சாதாரண காய்ச்சல்தான் என்று மருந்து கொடுத்து அனுப்பிவிட்டனர்.

அவர்பழைய தன் வீட்டிற்கு வந்தாலும், இந்த வைரல் வீடியோ அந்த ஏரியா முழுவதும் பரவியதால், பார்க்கும் இடமெல்லாம்அவரைவிரட்டியது வேறு வழியின்றி கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். முஸ்தபா 30 கிலோ மீட்டர் கடந்து திருமங்கலத்தில் உள்ள இரயில்வே கிராஸிங்கில் வரும்போது, அங்கு சரக்கு இரயில் வந்துகொண்டு இருக்கையில், ""காசும் இல்லை... இல்லாத நோய் நமக்கு வந்ததாகச் சொல்லி ஊர் விரட்டுகிறது என அவமானம் தாங்கமுடியாமல் இரயிலின்முன் பாய்ந்த முஸ்தபாவின் உடல் நான்கு துண்டுகளாக சிதறியது. இதில் நம் மனதும் சேர்ந்து சிதறிகிடக்கிறது.

incident

Advertisment

வதந்தியினால் முஸ்தபா வாழ்க்கையை வெறுத்து உயிரை விட்டிருக்கிறார். இவ்வளவு கொரூரமான நிலையிலா நாம் இருக்கிறோம். அருவருப்பும் அவமானமும் ஊட்டுஞ்செயலாக அச்செயல் நடந்தேறி இருக்கிறது என்று நினைக்கும்போது மனதை உலுக்கி எடுக்கிறது என்றார்.

nakkheeran app

முஸ்தபாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது அம்மா பீவி, "என் மகனை அநியாயமாக கொன்றுவிட்டார்கள். என் மகன் முஸ்தபாவின் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன்'' என்று கதறி அழுதார். தன் மீதும் அக்கம்பக்கத்தார் கரோனா சந்தேகத்துடன் இருப்பதை, படம் எடுப்பதை தவிர்க்கச் சொன்ன அவரது வார்த்தைகளில் தெரிந்தது.

தண்டவாளத்தில் நான்கு துண்டுகளாக சிதறியது முஸ்தபாவின் உடல் மட்டுமல்ல. நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் பண்பாடும் மனிதாபிமானமும்தான்.